Q4 FY26-ல் மட்டும் ₹221.30 கோடி என்ற அளவுக்கு மட்டுமே லாபம் ஈட்டியுள்ளது Dr. Reddy's. இது கடந்த ஆண்டு இதே காலாண்டில் ஈட்டிய ₹1,586.70 கோடியுடன் ஒப்பிடும்போது 86.05% குறைவு. இந்த பெரும் சரிவுக்கு முக்கிய காரணம், ₹700 கோடிக்கும் அதிகமான ஒரு முறை ஏற்படும் சிறப்பு செலவுகள் (One-time charges) தான்.
இதில், அமெரிக்க சந்தையில் ஜெனரிக் மருந்துகளின் விலை குறைக்கப்பட்டதால் மட்டும் ₹453 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. மேலும், CAR-T therapy தொடர்பான R&D திட்டங்களை நிறுத்தியதால் ₹135 கோடி நிகர இழப்பும், மத்திய வரி தணிக்கையை (Federal Tax Audit) தொடர்ந்து ₹114.10 கோடி ஒதுக்கப்பட்டதும், புதிய தொழிலாளர் சட்டங்களால் ஏற்பட்ட ₹117 கோடி கூடுதல் செலவுகளும் இந்த லாப வீழ்ச்சிக்கு காரணமாகியுள்ளன.
ஆனாலும், FY26 முழு நிதியாண்டிற்கான நிறுவனத்தின் ஒருங்கிணைந்த வருவாய் (Consolidated Revenue) மட்டும் 3.90% வளர்ந்து ₹35,058.60 கோடியாக பதிவாகியுள்ளது. பங்குதாரர்களுக்கு FY26-க்கான இறுதி டிவிடெண்டாக (Final Dividend) ஒரு பங்குக்கு ₹8 வழங்கவும் இயக்குநர் குழு பரிந்துரை செய்துள்ளது.
அதே சமயம், நிறுவனத்தின் தற்போதைய கடன் (Current Borrowings) முந்தைய ஆண்டை விட ₹3,804.50 கோடியில் இருந்து ₹6,293.50 கோடியாக அதிகரித்துள்ளதும் கவனிக்கத்தக்கது.
சமீபத்திய காலாண்டு முடிவுகளைப் பார்க்கும்போது, Sun Pharmaceutical Industries, Cipla, Zydus Lifesciences போன்ற இந்தியாவின் முன்னணி மருந்து நிறுவனங்கள் வருவாய் மற்றும் நிகர லாபம் என இரண்டிலும் நல்ல வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளன. இதன் மூலம், Dr. Reddy's-ன் இந்த குறிப்பிட்ட லாப சரிவு, நிறுவனத்தின் தனிப்பட்ட காரணங்களால் ஏற்பட்டதே தவிர, ஒட்டுமொத்த மருந்து துறையின் பிரச்னை அல்ல என்பது தெளிவாகிறது.
இனிவரும் நாட்களில், அமெரிக்க ஜெனரிக் மருந்து சந்தையில் நிலவும் விலை அழுத்தம், வரி தொடர்பான பிரச்னைகளின் தீர்வு, R&D திட்டங்களின் எதிர்காலம், மற்றும் கடன் மேலாண்மை ஆகியவை முதலீட்டாளர்களின் முக்கிய கவனமாக இருக்கும்.
