ரஷ்யாவின் முக்கியத்துவம் வாய்ந்த Engels விமானப்படை தளத்திற்கு அருகே ராணுவ அதிகாரி மீது தாக்குதல் நடத்திய **21** வயது மோல்டோவா நாட்டைச் சேர்ந்த நபரை ரஷ்ய பாதுகாப்புப் படையினர் கைது செய்துள்ளனர்.
ரஷ்யாவின் சரடோவ் பகுதியில் உள்ள மிக முக்கியமான Engels விமானப்படை தளத்திற்கு அருகே, கடந்த செப்டம்பர் 3-ம் தேதி மூத்த ராணுவ அதிகாரி ஒருவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய 21 வயதுடைய மோல்டோவா நாட்டைச் சேர்ந்த நபரை, நாட்டை விட்டு தப்பிக்க முயன்றபோது அஸ்ட்ராகான் பிராந்தியத்தில் வைத்து ரஷ்யாவின் ஃபெடரல் பாதுகாப்பு சேவை (FSB) கைது செய்துள்ளது.
தாக்குதலின் பின்னணி
இந்தத் தாக்குதலில் பாதிக்கப்பட்ட அதிகாரிக்கு குறைந்தது 6 குண்டுக்காயங்கள் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்தத் தாக்குதல் தற்செயலானதல்ல, இது வெளிநாட்டு உளவுத்துறையின் சதி என்று ரஷ்ய புலனாய்வு அமைப்பு குற்றம் சாட்டியுள்ளது. குறிப்பாக, இதற்குப் பின்னால் உக்ரைன் உளவுத்துறை இருப்பதாக ரஷ்ய அதிகாரிகள் பகிரங்கமாகத் தெரிவித்துள்ளனர்.
கைதிற்கான காரணம்
கைது செய்யப்பட்ட நபருக்கு இந்தத் தாக்குதலை நடத்துவதற்காக $70,000 அமெரிக்க டாலர்கள் (சுமார் ₹58 லட்சம்க்கும் மேல்) பணமாக வழங்கப்படுவதாக உறுதி அளிக்கப்பட்டதாக ரஷ்ய அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது. அவர் மீது கொலை முயற்சி மற்றும் சட்டவிரோதமாக ஆயுதம் கடத்தியது உள்ளிட்ட பல வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இந்தச் சம்பவம் ரஷ்யாவின் பாதுகாப்பு அமைப்பில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. புனித பீட்டர்ஸ்பர்க் முதல் யேகாடெரின்பர்க் வரை தொடர்ந்து ராணுவ அதிகாரிகளை குறிவைத்து நடக்கும் தாக்குதல்களைத் தடுக்கும் வகையில், பாதுகாப்பு நெறிமுறைகளை பலப்படுத்துமாறு கிரெம்ளின் உத்தரவிட்டுள்ளது.
