உலகத் தேர்தல்களில் தீவிர வானிலையின் தாக்கம்
International IDEA (The International Institute for Democracy and Electoral Assistance) வெளியிட்டுள்ள ஒரு புதிய அறிக்கை, கடந்த 20 ஆண்டுகளில் 52 நாடுகளில் நடைபெற்ற 94 தேர்தல்கள் தீவிர வானிலை மாற்றங்களால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கிறது. இந்தியாவில், தேர்தல் சமயங்களில் அதிகரிக்கும் கடும் வெயில் ஒரு பெரும் பிரச்சனையாக உருவெடுத்துள்ளது.
இந்தியாவின் தேர்தல் கால சவால்கள்
Centre for Science and Environment (CSE) தரவுகளின்படி, 2022 ஆம் ஆண்டில் கிட்டத்தட்ட ஒவ்வொரு நாளும் தீவிர வானிலை நிகழ்வுகள் பதிவாகியுள்ளன. 2025 ஆம் ஆண்டின் ஜனவரி முதல் நவம்பர் வரையிலான காலகட்டத்தில், கடந்த நான்கு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வானிலை சீற்றங்கள் அதிகரித்துள்ளன.
2024 ஆம் ஆண்டு நடந்த லோக்சபா தேர்தலின் போது, இந்தியாவின் பல பகுதிகளில் வெப்பநிலை 45 டிகிரி செல்சியஸ்-க்கு மேல் பதிவானது. வாக்களிப்பின் இறுதி நாளில் மட்டும், ஒரு குறிப்பிட்ட பகுதியில் 33 பேர் வெயிலால் உயிரிழந்ததாக அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதைத்தவிர, 2019 ஆம் ஆண்டிலேயே, ஒடிசாவில் ஒரு தொகுதியில் கடும் வெயிலின் காரணமாக வாக்குப்பதிவு ஒத்திவைக்கப்பட்டது.
இந்திய தேர்தல் ஆணையம் (Election Commission of India) வாக்காளர்களுக்கு குடிநீர், நிழற்குடைகள், மருத்துவ உதவிகள் போன்றவற்றை வழங்கினாலும், தேர்தல் செயல்முறைகளை காலநிலை மாற்றங்களுக்கு ஏற்ப தயார்நிலைபடுத்துவதில் இன்னும் முன்னேற்றம் தேவைப்படுகிறது.
உலகளவில் தேர்தல் தாமதங்களுக்கு வானிலையே காரணம்?
சர்வதேச அளவில், கடந்த 2006 ஆம் ஆண்டு முதல் இயற்கை சீற்றங்களால் குறைந்தது 26 தேர்தல்கள் தாமதமாகியுள்ளன. 2024 ஆம் ஆண்டில் மட்டும், புயல்கள், வெள்ளம், வெயில், காட்டுத்தீ, எரிமலை வெடிப்பு போன்ற பல்வேறு நிகழ்வுகளால் 18 நாடுகளில் நடைபெற்ற 23 தேர்தல்கள் பாதிக்கப்பட்டுள்ளன.
இந்த பாதிப்புகளில் 67% திடீர் புயல்கள் மற்றும் வெள்ளத்தாலும், 9% தீவிர வெயில் தாக்குதலாலும், 7% நிலநடுக்கம் மற்றும் காட்டுத்தீயாலும் நிகழ்ந்துள்ளன. இந்த அபாயங்கள் எந்த ஒரு குறிப்பிட்ட நாட்டையோ அல்லது வருமான நிலையையோ சாராமல் அனைத்து நாடுகளையும் பாதிக்கின்றன.
தேர்தல் நேர்மைக்கு காலநிலை தயார்நிலை அவசியம்
காலநிலை மாற்றம் அடையும் இந்த சூழலில், தேர்தல் நேர்மையைப் பாதுகாக்க, வாக்காளர்களின் உடல்நலம், பாதுகாப்பு மற்றும் காலநிலை மாற்றங்களைத் தாங்கும் திறன் ஆகியவற்றை உறுதி செய்ய வேண்டும் என International IDEA வலியுறுத்துகிறது. இதற்காக, தேர்தல் ஆணையங்கள், வானிலை மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறைகளுடன் இணைந்து செயல்பட்டு, முன்னெச்சரிக்கை அமைப்புகளைப் பயன்படுத்த வேண்டும். நீண்டகால தயார்நிலைக்கு, தேசிய காலநிலை தழுவல் (climate adaptation) மற்றும் பேரிடர் அபாயக் குறைப்பு (disaster risk reduction) திட்டங்களில் தேர்தல் செயல்முறைகளை ஒருங்கிணைக்க வேண்டியது அவசியம்.
இது வெறும் தொலைதூரப் பிரச்சனை அல்ல, ஜனநாயக அமைப்புகள் உடனடியாக எதிர்கொள்ள வேண்டிய நிதர்சனம் என்று Secretary-General Kevin Casas-Zamora கூறியுள்ளார்.
