எஸ்தோனியாவில் உள்ள Milrem Robotics நிறுவனத்தின் மீது நடந்த தீவைப்பு தாக்குதலுக்கு ரஷ்யாவின் உளவுத்துறைதான் காரணம் என்பதை அந்நாட்டு பாதுகாப்பு அமைப்பு உறுதிப்படுத்தியுள்ளது. உக்ரைனுக்குத் தேவையான தானியங்கி வாகனங்களை தயாரிக்கும் இந்த நிறுவனத்தின் மீதான தாக்குதல் ஐரோப்பிய டிஃபன்ஸ் துறையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆகஸ்ட் 15 அன்று தாலினில் உள்ள Milrem Robotics நிறுவனத்தில் நிகழ்ந்த தீ விபத்து, சாதாரண விபத்து அல்ல; இது ரஷ்யாவின் பாதுகாப்பு சேவைகளால் திட்டமிடப்பட்ட ஒரு சதிச் செயல் என்று எஸ்தோனிய அதிகாரிகள் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். உக்ரைன் போர்க்களத்தில் முக்கிய பங்கு வகிக்கும் THeMIS தானியங்கி தரைவழி வாகனங்களை (Unmanned Ground Vehicles) தயாரிக்கும் முக்கிய மையமே இந்த தாக்குதலுக்கு இலக்காகியுள்ளது.
கைது நடவடிக்கை
இந்த தாக்குதலுக்குப் பிறகு எஸ்தோனிய சட்ட அமலாக்க அமைப்புகள் அதிரடியாகச் செயல்பட்டு, லத்வியா எல்லையில் சந்தேகத்திற்குரிய 3 பேரை கைது செய்து எஸ்தோனியாவுக்கு கொண்டு வந்துள்ளன. இவர்களின் நடவடிக்கைகள் ஐரோப்பா முழுவதும் ரஷ்யாவால் தூண்டப்பட்ட பல்வேறு சதிச் செயல்களுடன் ஒத்துப்போவதாக அந்நாட்டின் உள்நாட்டு பாதுகாப்புத் துறை தெரிவித்துள்ளது.
பாதுகாப்பு சவால்கள்
2022-ம் ஆண்டு பிப்ரவரியில் உக்ரைன் போர் தொடங்கியதிலிருந்து, ஐரோப்பா முழுவதும் சைபர் தாக்குதல்கள் மற்றும் தீவைப்பு போன்ற ரஷ்யா சார்ந்த சுமார் 200 நாசவேலைகள் பதிவாகியுள்ளன. 2023-ல் ஐக்கிய அரபு அமீரகத்தின் Edge Group நிறுவனத்தால் கையகப்படுத்தப்பட்ட Milrem Robotics போன்ற நிறுவனங்களுக்கு, இந்த தாக்குதல்கள் ஒரு புதிய வகை ஆபத்தை உணர்த்துகின்றன. இனிவரும் காலங்களில் டிஃபன்ஸ் உற்பத்தி நிறுவனங்கள் தங்கள் பாதுகாப்புச் செலவுகளை (Security Spending) பலமடங்கு அதிகரிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளன.
அரசின் பதில்
எஸ்தோனிய வெளியுறவு அமைச்சர் மார்கஸ் சாக்னா, ரஷ்யாவின் இந்த செயலை ஒரு பொறுப்பற்ற தீவிரமான ஆத்திரமூட்டல் என்று கண்டனம் தெரிவித்துள்ளார். ரஷ்யா இக்குற்றச்சாட்டுகளை மறுத்தாலும், பிரதமர் கிறிஸ்டன் மிட்சல் தலைமையிலான அரசு, உக்ரைனுக்கு ஆதரவாக தொடர்ந்து செயல்படுவோம் என்றும், இத்தகைய ரகசிய தாக்குதல்களை முறியடிக்க தயார் என்றும் உறுதியளித்துள்ளது.
