சீனா அமல்படுத்தியுள்ள புதிய 'State Council Order No. 841' தொழில்நுட்ப பாதுகாப்பு விதிகள், அந்நாட்டிலிருந்து ஊழியர்கள் வெளியேறுவதற்கும், வெளிநாட்டினர் நுழைவதற்கும் கடுமையான கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இது சர்வதேச நிறுவனங்களுக்கு பெரும் சவாலாக மாறியுள்ளது.
சீன அரசு செப்டம்பர் 15, 2026 முதல் அமல்படுத்தியுள்ள இந்த புதிய சட்டத்தின்படி, தொழில்நுட்ப பாதுகாப்பு மற்றும் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாகக் கருதப்படும் நபர்களின் நடமாட்டம் இனி அரசின் முழு கட்டுப்பாட்டில் இருக்கும். குறிப்பாக, செமிகண்டக்டர் மற்றும் டெக் துறையில் பணிபுரியும் நிபுணர்கள் மீது அதிக கவனம் செலுத்தப்படுகிறது.
என்னென்ன புதிய கட்டுப்பாடுகள்?
- எக்சிட் பேன் (Exit Bans): தொழில்நுட்ப ஏற்றுமதி அல்லது இறக்குமதி விதிகளை மீறுவதாகச் சந்தேகிக்கப்படும் சீனக் குடிமக்களுக்கு 6 மாதங்கள் முதல் 3 ஆண்டுகள் வரை வெளிநாடு செல்லத் தடை விதிக்கப்படும்.
- நுழைவு மறுப்பு (Entry Denials): விசா விண்ணப்பத்தில் தவறான தகவல்களை வழங்கும் வெளிநாட்டினருக்கு 1 முதல் 5 ஆண்டுகள் வரை சீனாவுக்குள் நுழையத் தடை விதிக்கப்படும்.
- தரவு சரிபார்ப்பு: குடியேற்ற அதிகாரிகள் இனி மின்னணுத் தரவுகள் மற்றும் ஆவணங்களை மிகத் தீவிரமாகச் சரிபார்க்கும் அதிகாரத்தைப் பெற்றுள்ளனர்.
நிறுவனங்களுக்கு உள்ள சிக்கல் என்ன?
சர்வதேச நிறுவனங்கள் தங்கள் தொழில்நுட்பத் திட்டங்களை நிர்வகிக்க ஊழியர்களை அடிக்கடி எல்லை தாண்டி மாற்ற வேண்டியிருக்கும். தற்போதுள்ள விதிகளின்படி, முக்கிய பணியாளர்கள் சீனாவுக்குள் வருவதிலோ அல்லது வெளியேறுவதிலோ சிக்கல் ஏற்பட்டால், அது திட்ட தாமதத்திற்கும், உற்பத்தி முடக்கத்திற்கும் வழிவகுக்கும்.
இந்த விதிகளின் பயன்பாடு எந்த அளவுக்குக் கடுமையாக இருக்கும் என்பது குறித்து இன்னும் தெளிவான விளக்கம் இல்லை. இதனால், தைவானிய நிறுவனங்கள் மற்றும் பல குளோபல் நிறுவனங்கள் தங்கள் டேலண்ட் மேனேஜ்மெண்ட் (Talent Management) வியூகங்களை மறுபரிசீலனை செய்யத் தொடங்கியுள்ளன. முதலீட்டாளர்கள் இந்த மாற்றங்கள் நிறுவனங்களின் செயல்பாட்டில் எத்தகைய பாதிப்பை ஏற்படுத்துகிறது என்பதைக் கூர்ந்து கவனித்து வருகின்றனர்.
