தினசரி அலுவலக பயண சந்தையில் (Daily Office Commute) கால் பதிக்க, MakeMyTrip நிறுவனம் Quick Ride-ன் பெரும்பான்மையான பங்குகளை வாங்கியுள்ளது. இதற்காக 'Co Ride Mobility' என்ற புதிய நிறுவனமும் உருவாக்கப்பட்டுள்ளது.
ஆன்லைன் டிராவல் ஜாம்பவானான MakeMyTrip, பெங்களூருவைச் சேர்ந்த Quick Ride நிறுவனத்தை தன்வசப்படுத்தியுள்ளது. இதன் மூலம், நீண்ட தூர பயணங்களுக்கு மட்டும் பயன்படும் நிறுவனமாக இல்லாமல், தினசரி அலுவலக போக்குவரத்து மற்றும் கார்பூலிங் (Carpooling) சந்தையிலும் வலுவான இடத்தைப் பிடிக்க திட்டமிட்டுள்ளது.
புதிய கூட்டணி: Co Ride Mobility
இந்த புதிய முயற்சியை நிர்வகிக்க 'Co Ride Mobility Private Limited' என்ற புதிய நிறுவனம் தொடங்கப்பட்டுள்ளது. குறிப்பாக, Quick Ride நிறுவனத்தின் பழைய எலக்ட்ரிக் டாக்சி சேவைகள் இந்த டீலில் சேர்க்கப்படவில்லை. அவை தொடர்ந்து பழைய நிறுவனமான iDisha Info Labs மூலம் இயங்கும்.
பயண சூழலில் ஒரு பிடிமானம்
MakeMyTrip ஏற்கனவே Savaari மற்றும் Happay போன்ற நிறுவனங்களை தன் வசம் வைத்துள்ளது. இப்போது Quick Ride-ஐ இணைப்பதன் மூலம், redBus போல தினசரி பயணிகளிடமும் தங்கள் ஆதிக்கத்தை செலுத்த திட்டமிட்டுள்ளது. அதாவது, ஒரு பயனர் காலை அலுவலகம் செல்லும் பயணத்தில் தொடங்கி, சுற்றுலா வரை அனைத்திற்கும் ஒரே ஆப்பை பயன்படுத்த வேண்டும் என்பதே இவர்களின் நோக்கம்.
சந்தை போட்டி மற்றும் சவால்கள்
இந்த முயற்சி வளர்ச்சிக்கு வழிவகுத்தாலும், Uber, Ola மற்றும் Rapido போன்ற பலம் வாய்ந்த நிறுவனங்களுடனான போட்டி கடுமையாக இருக்கும். தினசரி பயண சேவைகளை ஒருங்கிணைப்பதில் ஏற்படும் செலவுகள் மற்றும் தொழில்நுட்ப சவால்களை எதிர்கொள்வது பங்குதாரர்களுக்கு முக்கியமான ஒன்றாக இருக்கும். லாபத்தை நிலைநிறுத்த இந்த சேவை எவ்வளவு விரைவாக மக்களிடையே சென்றடைகிறது என்பதை பொறுத்தே நிறுவனத்தின் எதிர்கால வளர்ச்சி அமையும்.
