இந்தியன் ரயில்வே தனது 'Ghar se Ghar Tak' பார்சல் சேவையை நாட்டின் 8 முக்கிய நகரங்களுக்கு விரிவுபடுத்தியுள்ளது. சாலை வழி லாஜிஸ்டிக்ஸ் நிறுவனங்களுக்கு போட்டியாக, முதல் மற்றும் கடைசி மைல் டெலிவரியை இந்த சேவை உறுதி செய்கிறது.
இந்திய ரயில்வே தனது சரக்கு போக்குவரத்து சேவையை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்ல திட்டமிட்டுள்ளது. டெல்லி, மும்பை, கொல்கத்தா, சென்னை, அகமதாபாத், ஹைதராபாத், பெங்களூரு மற்றும் புனே ஆகிய 8 முக்கிய நகரங்களில் இந்த 'Ghar se Ghar Tak' சேவை தற்போது செயல்பாட்டிற்கு வருகிறது. இதில் ரயில்வே நிர்வாகம் நீண்ட தூர பயணத்தையும், தனியார் நிறுவனங்கள் பார்சலை வீடுகளிலிருந்து பெற்று ரயில் நிலையம் வரை கொண்டு சேர்ப்பதையும் கவனித்துக்கொள்ளும்.
கவரும் சலுகைகள்
இந்த திட்டத்தை மக்களிடம் கொண்டு சேர்க்க ரயில்வே வாரியம் அதிரடி சலுகைகளை அறிவித்துள்ளது. ரவுண்ட்-ட்ரிப் கோச்சுகளை புக் செய்யும் பார்சல் அகரிகேட்டர்களுக்கு சரக்கு கட்டணத்தில் 25% வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது. பண்டிகைக் காலத்தையொட்டி, நிறுவனங்கள் தங்கள் சரக்குகளை விரைவாக அனுப்ப இது ஒரு முக்கிய வாய்ப்பாக பார்க்கப்படுகிறது.
லாஜிஸ்டிக்ஸ் நிறுவனங்களுக்கு சவாலா?
இந்த புதிய முயற்சி பங்குச்சந்தை முதலீட்டாளர்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்துள்ளது. Blue Dart, Delhivery மற்றும் TCI Express போன்ற முன்னணி நிறுவனங்கள் இதுவரை லாஜிஸ்டிக்ஸ் சந்தையைத் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ளன. ரயில்வேயின் இந்த குறைந்த கட்டண சேவைக்கு ஈடுகொடுக்க, தனியார் நிறுவனங்கள் தங்களின் தொழில்நுட்பம் மற்றும் டெலிவரி வேகத்தை எப்படி மேம்படுத்தப்போகின்றன என்பதுதான் இப்போதைய மில்லியன் டாலர் கேள்வி.
நிச்சயமாக, மொபைல் ஆப் மூலம் இந்த சேவையை டிஜிட்டல் மயமாக ரயில்வே கையாண்டால் மட்டுமே இது வெற்றி பெறும். சரியான நேரத்தில் டெலிவரி மற்றும் தரமான சேவை வழங்கப்பட்டால், எதிர்காலத்தில் சரக்கு போக்குவரத்து சந்தையில் ரயில்வே ஒரு பெரிய இடத்தைப் பிடிக்க வாய்ப்புள்ளது.
