இந்தியாவில் விமான நிலையங்களை நிர்வகிக்கும் நிறுவனங்கள், ஏர்லைன்ஸ்களில் பங்குகளை வைத்திருக்க அனுமதிக்கலாமா என்று மத்திய சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம் ஆய்வு செய்து வருகிறது.
இந்தியாவில் விமான போக்குவரத்து துறையை விரிவுபடுத்தும் நோக்கில், விமான நிலையங்களை நிர்வகிக்கும் நிறுவனங்கள் ஏர்லைன்ஸ்களில் முதலீடு செய்ய அனுமதிக்கலாம் என்று மத்திய அரசு யோசித்து வருகிறது. இது குறித்து மத்திய சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் கே. ராம்மோகன் நாயுடு பேசுகையில், 2047-ம் ஆண்டுக்குள் நாட்டின் விமான நிலையங்களின் எண்ணிக்கையை 350-க்கும் மேல் உயர்த்துவதே அரசின் முக்கிய இலக்கு என்று குறிப்பிட்டார்.
முதலீடு மற்றும் சவால்கள்
பொதுவாக, விமான நிலையங்களின் செயல்பாடு மற்றும் விமான சேவை ஆகியவற்றை தனித்தனியே வைத்திருப்பதுதான் இதுவரை வழக்கமாக இருந்து வருகிறது. ஏனெனில், ரன்வே வசதி, லேண்டிங் ஸ்லாட்கள் போன்றவற்றை நிர்வகிக்கும் விமான நிலையங்கள் ஒரு 'நேச்சுரல் மோனோபோலி' (Natural Monopoly) வகையைச் சேர்ந்தவை. இதில் ஏர்லைன்ஸ்களுக்கு பங்கு வழங்கினால், சொந்த விமானங்களுக்கு முன்னுரிமை அளித்தல் போன்ற 'Conflict of Interest' சிக்கல்கள் எழ வாய்ப்புள்ளது.
கட்டுப்பாடுகள் என்ன?
டெல்லி மற்றும் மும்பை போன்ற பெரிய விமான நிலையங்களுக்கான தற்போதைய ஒப்பந்தங்களில், குறுக்கு-உரிமை (Cross-ownership) விவகாரத்தில் கடுமையான கட்டுப்பாடுகள் உள்ளன. இதை மாற்றியமைக்க அரசு திட்டமிட்டால், லேண்டிங் ஸ்லாட்கள் மற்றும் இதர சேவைகளில் அனைத்து ஏர்லைன்ஸ்களும் சமமாக நடத்தப்படுவதை உறுதி செய்ய வேண்டியிருக்கும்.
தற்போது, AERA மற்றும் DGCA போன்ற அமைப்புகள் இந்த விதிகளை ஆய்வு செய்து வருகின்றன. இன்னும் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை என்றாலும், இந்த முன்மொழிவு விமான போக்குவரத்து துறையில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்துமா என்பதை முதலீட்டாளர்கள் உன்னிப்பாக கவனித்து வருகின்றனர்.
