இந்தியாவில் இனி விமான கட்டணத்திற்கு உச்ச வரம்பு (Price Cap) கிடையாது என மத்திய அரசு அதிரடி முடிவு எடுத்துள்ளது. அதற்கு பதிலாக 'பாரதிய வாயுயான் அதினியம் 2024' (Bharatiya Vayuyan Adhiniyam 2024) சட்டத்தின் கீழ், கட்டண வெளிப்படைத்தன்மையை (Transparency) கட்டாயமாக்கியுள்ளது.
விமான பயண கட்டணத்தை அரசு நேரடியாக தீர்மானிக்காது என்று மத்திய அரசு தெளிவாக அறிவித்துள்ளது. இது ஏர்லைன்ஸ் நிறுவனங்களுக்குப் பெரிய நிம்மதியை அளித்துள்ளது. போட்டி நிறைந்த இந்த சந்தையில், கட்டணங்களை நிறுவனங்களே நிர்ணயித்துக் கொள்ள சுதந்திரம் வழங்கப்பட்டுள்ளது.
புதிய விதிமுறை என்ன?
இனி விமான நிறுவனங்கள் தங்கள் டிக்கெட் கட்டண விவரங்களை DGCA (Directorate General of Civil Aviation) அமைப்பிடம் முன்கூட்டியே சமர்ப்பிக்க வேண்டும். டிக்கெட் விலையில் அடிப்படை கட்டணம் (Base fare), வரிகள் (Taxes), மற்றும் பிற கூடுதல் கட்டணங்கள் என அனைத்தையும் தெளிவாகப் பிரிக்க வேண்டும். இது பயணிகளுக்குக் கட்டணக் குழப்பத்தைத் தவிர்க்க உதவும்.
ஏர்லைன்ஸ் நிறுவனங்களுக்கு ஏன் நிம்மதி?
விமான எரிபொருள் விலை ஏற்றம் மற்றும் டாலர் மதிப்புக்கு ஏற்ப விமான பராமரிப்புச் செலவுகள் என பல சவால்களை நிறுவனங்கள் எதிர்கொள்கின்றன. திடீரென அரசு கட்டணங்களை முடக்கினால், அது நிறுவனங்களின் லாபத்தைப் (Margin) பாதிக்கும். இப்போதுள்ள புதிய நடைமுறை, நிறுவனங்களின் நிதி நிலைத்தன்மைக்கு (Financial Stability) ஊக்கமளிப்பதாக அமைந்துள்ளது.
எமர்ஜென்சி சூழலில் அரசு என்ன செய்யும்?
சாதாரண காலங்களில் சந்தை நிலவரப்படி கட்டணம் இருக்கும். இருப்பினும், பேரிடர் அல்லது அவசர காலங்களில் விலையை உயர்த்தினால், அதைத் தடுக்க அரசு தனது கட்டுப்பாட்டைத் தற்காலிகமாகப் பயன்படுத்தும். இந்த 'சேஃப்டி வால்வு' வசதி மூலம் நுகர்வோர் பாதிக்கப்படாமல் அரசு உறுதி செய்யும்.
