புதிய அபராதக் கட்டண அமைப்பு
மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகம் (MoRTH) வாகன ஓவர்லோடு அபராதங்களை மாற்றியமைத்துள்ளது. ஏப்ரல் 15 முதல் புதிய விதிமுறைகள் நடைமுறைக்கு வருகின்றன. இனி ஒரே மாதிரியான அபராதம் என்பதை மாற்றி, வாகனங்கள் கொண்டு செல்லும் அதிகப்படியான சுமை சதவீதத்திற்கு ஏற்ப கட்டணம் வசூலிக்கப்படும்.
அதிகப்படியான எடைக்கான படிநிலை அபராதங்கள்
புதிய விதிகளின்படி, குறிப்பிட்ட எடை வரம்பை விட 10% வரை அதிகமாகச் செல்லும் வாகனங்களுக்கு அபராதம் இல்லை. ஆனால், பெரிய அளவிலான மீறல்களுக்கு, சரக்கு வாகனங்கள் அதன் அனுமதிக்கப்பட்ட எடை வரம்பை விட 10% முதல் 40% வரை அதிகமாகச் சென்றால், அடிப்படை டோல் கட்டணத்தை விட இரண்டு மடங்கு அபராதம் விதிக்கப்படும். 40% க்கும் அதிகமாக ஓவர்லோடு செல்லும் வாகனங்களுக்கு, வழக்கமான கட்டணத்தை விட நான்கு மடங்கு அதிகமாக வசூலிக்கப்படும்.
பாதுகாப்பு மற்றும் உள்கட்டமைப்புப் பராமரிப்பு இலக்கு
இந்த மாற்றியமைக்கப்பட்ட அணுகுமுறை, சாலைப் பாதுகாப்பை மேம்படுத்துவதற்கும், தேசிய நெடுஞ்சாலை உள்கட்டமைப்பின் ஆயுளை நீட்டிப்பதற்கும் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும், சிறிய அளவிலான எடை வேறுபாடுகளுக்கு தேவையற்ற தொந்தரவுகளைக் குறைக்கவும் இது உதவும். ஓவர்லோடு கட்டண வசூல், FASTag மற்றும் பிற மின்னணு கட்டண முறைகள் மூலம் நிர்வகிக்கப்படும். சான்றளிக்கப்பட்ட Weigh-in-Motion (WIM) அமைப்புகள் அல்லது கட்டணச் சாவடிகளில் உள்ள ஸ்டாட்டிக் வெைப்ரிட்ஜ்கள் மூலம் மட்டுமே இந்த அமலாக்கம் நடைபெறும். வாகனத்தின் எடை, அதன் பதிவேட்டுச் சான்றிதழில் (Registration Certificate - RC) குறிப்பிடப்பட்டுள்ள மொத்த வாகன எடைக்கு (Gross Vehicle Weight - GVW) எதிராக அளவிடப்படும்.
தரவு வெளிப்படைத்தன்மை கட்டாயம்
மேம்பட்ட இணக்கம் மற்றும் மேற்பார்வைக்காக, ஓவர்லோடு செய்யப்பட்ட அனைத்து வாகனங்களின் விவரங்கள், குறிப்பாக அதிகப்படியான சுமை குறித்த தரவுகள், தானாகப் பதிவு செய்யப்பட்டு VAHAN தரவுத்தளத்திற்கு (database) தெரிவிக்கப்பட வேண்டும் என அமைச்சகம் கோரியுள்ளது. ஒழுங்குமுறை நோக்கங்களுக்காக தெளிவான, தணிக்கை செய்யக்கூடிய பதிவை வழங்குவதே இதன் நோக்கம்.