அரசு அறிவித்த கட்டணக் குறைப்பு: நிர்வாகங்கள் எதிர்ப்பு!
இந்திய விமான நிலையங்கள் பொருளாதார ஒழுங்குமுறை ஆணையம் (AERA) ஆனது, முக்கிய விமான நிலையங்களில் உள்நாட்டு விமானங்களுக்கான லேண்டிங் மற்றும் பார்க்கிங் கட்டணத்தை அடுத்த 3 மாதங்களுக்கு 25% குறைக்க உத்தரவிட்டுள்ளது. இந்த அதிரடி நடவடிக்கை, கடந்த 16 ஆண்டுகளாக கட்டியெழுப்பப்பட்ட ஒழுங்குமுறை ஸ்திரத்தன்மையை பாதிப்பதாக விமான நிலைய நிர்வாகங்கள் குற்றம் சாட்டுகின்றன. மேலும், இது தொடர்பாக தங்களுக்கு எந்தவிதமான முன் ஆலோசனையும் வழங்கப்படவில்லை என்றும் தெரிவித்துள்ளன.
பணப்புழக்கம் பாதிப்பு, கடன் ரிஸ்க் அதிகரிப்பு
இந்த 25% கட்டணக் குறைப்பு, விமான நிலையங்களின் உடனடி பணப்புழக்கத்தை (Cash Flow) கடுமையாக பாதிக்கும் என்று நிர்வாகங்கள் எச்சரிக்கின்றன. உள்கட்டமைப்பு, சேவை மற்றும் பாதுகாப்பு போன்ற அத்தியாவசிய செலவுகளைக் குறைக்க முடியாது என்றும், ஆனால் வருமானம் குறையும் என்றும் குறிப்பிட்டுள்ளன. விமான நிலையங்களுக்கான செயல்பாட்டுச் செலவுகள் அப்படியே இருக்கும் நிலையில், வருமானம் குறைவதால் கடன்களைத் திருப்பிச் செலுத்துவதில் சிரமம் ஏற்படும் என்றும், இது நிதி ஸ்திரத்தன்மையை அச்சுறுத்தும் என்றும் கூறியுள்ளன.
தீர்வுகள் கோரிய ஆபரேட்டர்கள்
இந்திய விமான நிலைய ஆபரேட்டர்ஸ் அசோசியேஷன் (APAO) தரப்பில், சிவில் ஏவியேஷன் அமைச்சகத்திற்கு (MoCA) ஒரு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. அதில், விமான நிலையங்கள் ஆணையத்திற்கு (AAI) செலுத்த வேண்டிய வருவாய் பங்கு (Revenue Share) அல்லது ஒரு பயணிக்கு விதிக்கப்படும் கட்டணத்தை, இந்தக் கட்டணக் குறைப்புக்கு இணையான தொகையை வட்டி அல்லது அபராதம் இன்றி தள்ளிவைக்க வேண்டும் என்று கோரியுள்ளனர். மேலும், வெளிநாட்டுப் பயணிகளுக்கான பயனர் மேம்பாட்டுக் கட்டணத்தை (User Development Fees - UDF) அதிகரிக்கவும், எதிர்கால கட்டண நிர்ணயத்தில் இந்தக் குறுகிய கால இழப்புகளை கணக்கில் எடுத்துக்கொள்ளவும் பரிந்துரைத்துள்ளனர். விமான டர்பைன் எரிபொருளின் (ATF) மீதான மதிப்பு கூட்டு வரியை (VAT) 5% அல்லது அதற்குக் குறைவாக மாநில அரசுகளின் ஒத்துழைப்புடன் குறைக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர். பொதுத்துறை வங்கிகளால் பெருமளவில் நிதியளிக்கப்படும் முக்கிய உள்கட்டமைப்பு திட்டங்களை ஆதரிக்க, விமான நிலையங்களின் நிதி ஆரோக்கியம் மிக முக்கியம் என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
