ஊழியர்களின் வருமானம் ஏன் குறைந்தது?
டெலிவரி ஊழியர்கள் தற்போது பெரும் சிக்கலை சந்தித்து வருகின்றனர். அவர்களின் அன்றாட செலவுகள், குறிப்பாக பெட்ரோல் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. அன்றாடம் சுமார் 100 கிலோமீட்டர் வரை பயணிக்கும் பல ஊழியர்களுக்கு, தற்போதைய வருமானம் போதுமானதாக இல்லை.
முன்பெல்லாம், அதிக சலுகைகளை கொடுத்து ஊழியர்களை ஈர்த்த Quick-commerce நிறுவனங்கள், இப்போது லாபத்தை மையமாக வைத்து செயல்படத் தொடங்கியுள்ளன. அதிக பணத்தை செலவழிக்கும் பழைய முறையிலிருந்து மாறி, லாபகரமான, நிலைத்தன்மை கொண்ட புதிய வியூகத்திற்கு மாறியுள்ளன.
லாபத்தை நோக்கிய பயணம்
TeamLease Services நிறுவனத்தின் மூத்த துணைத் தலைவர் பாலசுப்ரமணியன் கூறுகையில், "நிறுவனங்கள் இப்போது ஊழியர்களை அதிகரிப்பதை விட, லாபம் மற்றும் IPO-விற்கு தயாராவதற்கே முக்கியத்துவம் கொடுக்கின்றன. முன்பு பணத்தை வாரி இறைத்தார்கள். இப்போது லாபம், IPO தயார்நிலை மற்றும் ஊழியர்களின் பயன்பாட்டை மேம்படுத்துவதில் கவனம் செலுத்துகின்றனர்" என்றார்.
தேவைக்கேற்ப மாற்றம்
நிறுவனங்கள், குறிப்பாக மதியம் 12 மணி முதல் 5 மணி வரை உள்ள அதிக வெப்பமான நேரங்களில் டெலிவரி தேவையை நிர்வகிக்கும் விதத்தையும் மாற்றியமைத்துள்ளன. அதிக ஆர்டர்களைத் தள்ளுவதற்குப் பதிலாக, சில பகுதிகளில் குறைந்த எண்ணிக்கையிலான ஊழியர்களை மட்டுமே பயன்படுத்தி, கடும் வெயிலில் அவர்கள் அதிகம் பயணப்படுவதை குறைக்கிறார்கள். மேலும், ஏற்கனவே டெலிவரி செய்யாத ஊழியர்களுக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில் அல்காரிதம்கள் மாற்றியமைக்கப்படுகின்றன. பல ஆர்டர்களை ஒரே பயணத்தில் கொண்டு செல்லும் முறையும் குறைக்கப்பட்டுள்ளது.
சலுகை மாற்றங்கள்
அடிப்படை சம்பள விகிதங்கள் மாறாமல் இருந்தாலும், சலுகைகள், மைல்கற்கள் மற்றும் நேரத்தைப் பொறுத்து மொத்த வருமானம் மாறுகிறது. பகல் நேர சலுகைகளை குறைத்து, இரவு நேர சலுகைகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. இதன் மூலம் ஊழியர்களின் தேவையை நிர்வகிக்க முடியும் என நிறுவனங்கள் நம்புகின்றன. மேலும், ஒரே நகரத்தில் கூட சில பகுதிகளில் ஊழியர் பற்றாக்குறை இருப்பதும், வேறு சில பகுதிகளில் அதிகமாக இருப்பதும் குறிப்பிடத்தக்கது.
சவால்களுக்கு மத்தியில் வளர்ச்சி
நுகர்வோரின் செலவினங்கள் அதிகரிப்பு மற்றும் மளிகை அல்லாத பொருட்களிலும் Quick-commerce விரிவடைவதால், இதன் வளர்ச்சி வலுவாக உள்ளது. இருப்பினும், இந்த வளர்ச்சி ஊழியர்களின் எண்ணிக்கையில் நேரடியாக பிரதிபலிக்கவில்லை. மேலும், பல்வேறு வகையான பொருட்கள் வருவதால், கிடங்கு நிர்வாகத்திலும் (Warehouse Optimization) நிறுவனங்கள் சவால்களை சந்திக்கின்றன. ஆனாலும், கட்டுமான மற்றும் உள்கட்டமைப்பு போன்ற துறைகளுடன் ஒப்பிடும்போது, செயலி சார்ந்த டெலிவரி வேலைகளில் ஊழியர் பற்றாக்குறை தற்போது குறைவாகவே உள்ளது.
