தேசிய நெடுஞ்சாலை திட்டங்களில் தாமதத்தை தவிர்க்கவும், செலவு அதிகரிப்பை தடுக்கவும் புதிய தரக்கட்டுப்பாட்டு முறையை மத்திய அமைச்சர் நிதின் கட்கரி அறிவித்துள்ளார். இனி டெண்டர் பெறுவதில் கட்டுமான நிறுவனங்களின் கடந்தகால செயல்பாடுகளே முக்கிய அளவுகோலாக இருக்கும்.
தேசிய நெடுஞ்சாலை திட்டங்களை செயல்படுத்தும் விதத்தில் பெரும் மாற்றத்தை கொண்டுவர மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. குஜராத்தில் நடைபெற்ற ‘சிந்தன் ஷிவிர் 2026’ (Chintan Shivir 2026) நிகழ்வில் பேசிய மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, குறிப்பாக திட்டத்தின் ஆரம்ப கட்டமான 'Detailed Project Report' (DPR) தயாரிப்பில் கூடுதல் கவனம் செலுத்தப்பட வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார்.
முதலீட்டாளர்கள் கவனத்திற்கு:
இதுவரை, திட்டமிடலில் இருந்த குறைபாடுகளும், தவறான புவியியல் தரவுகளுமே திட்டங்கள் பாதியில் நின்று போவதற்கும், பட்ஜெட் பல மடங்கு உயர்வதற்கும் முக்கிய காரணமாக இருந்தன. இனி, கட்டுமானப் பணிகள் தொடங்குவதற்கு முன்பே மிகத்துல்லியமான திட்டமிடல் கட்டாயமாக்கப்படுகிறது.
டெண்டர் விதிமுறைகளில் மாற்றம்:
மத்திய அமைச்சகம் தற்போது 'செயல்பாட்டு அடிப்படையிலான பொறுப்புக்கூறல்' (Performance-based accountability) முறையை நோக்கி நகரவுள்ளது. இனி வரும் காலங்களில், ஒரு நிறுவனம் கடந்த காலங்களில் எவ்வாறு செயல்பட்டது, DPR அறிக்கைகளை எவ்வளவு துல்லியமாக வழங்கியது என்பதைப் பொறுத்தே புதிய அரசு டெண்டர்களைப் பெற முடியும். இது நிறுவனங்களுக்கு ஒரு பெரிய சவாலாக அமையும்.
கட்டுமான நிறுவனங்களுக்கு ஏற்படும் தாக்கம்:
இந்தக் புதிய விதிமுறைகளால், கட்டுமான நிறுவனங்கள் அதிக முதலீடு செய்து தரமான தொழில்நுட்ப ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டியிருக்கும். இதனால், குறுகிய காலத்தில் நிறுவனங்களின் லாப வரம்பு (Margin) பாதிக்கப்படலாம். அதேசமயம், முறையான திட்டமிடல் இல்லாத நிறுவனங்கள் 'பிளாக்லிஸ்ட்' செய்யப்படும் அபாயமும் உள்ளது. எனவே, அரசு டெண்டர்களை அதிகம் நம்பியுள்ள நிறுவனங்களின் பங்குகளை கவனிப்பது இப்போது மிகவும் அவசியம்.
