கொச்சி மற்றும் நவா ஷேவா முனையங்களில் இருந்து மத்திய கிழக்கு நாடுகளை இணைக்கும் வகையில், DP World நிறுவனம் புதிய இருவார கால கப்பல் சேவையை தொடங்கியுள்ளது. இந்த நேரடிப் பாதை மூலம் தென்னிந்திய ஏற்றுமதியாளர்கள் மற்றும் இறக்குமதியாளர்களுக்கு போக்குவரத்து நேரம் மற்றும் செலவு கணிசமாகக் குறையும்.
நேரடி கப்பல் சேவை: லாஜிஸ்டிக்ஸில் ஒரு பெரிய மாற்றம்
DP World நிறுவனம் தனது கொச்சி சர்வதேச கன்டெய்னர் டிரான்ஷிப்மென்ட் டெர்மினல் மற்றும் நவா ஷேவா முனையங்களை இணைத்து, மத்திய கிழக்கு நாடுகளுக்கு ஒரு நேரடி கப்பல் சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்தச் சேவை ஐக்கிய அரபு அமீரகத்தின் புஜைரா (Fujairah), ஓமானின் சோஹர் (Sohar) மற்றும் ஏமனின் ஏடன் (Aden) ஆகிய முக்கிய வணிக மையங்களை நேரடியாக இணைக்கிறது.
கப்பல் மற்றும் திறன் விவரம்
தற்போது இந்த வழித்தடத்தில் M.V. MARSA VIRGO மற்றும் M.V. MARSA ZENITH ஆகிய இரண்டு கப்பல்கள் இயக்கப்படுகின்றன. ஒவ்வொரு கப்பலும் தலா 500 TEU (Twenty-foot Equivalent Units) க்கும் அதிகமான திறன் கொண்டவை. இதன் தொடக்க பயணத்திலேயே கொச்சி முனையம் 1,000 TEU-க்கும் அதிகமான சரக்குகளைக் கையாண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
ஏற்றுமதியாளர்களுக்கு என்ன லாபம்?
இதுவரை தென்னிந்திய வணிகர்கள் தங்களது சரக்குகளை பெரிய ஹப் துறைமுகங்கள் வழியாக அனுப்ப வேண்டியிருந்தது, இதனால் அதிக நேரமும் செலவும் ஆனது. இப்போது ஜவுளி, வாசனைத் திரவியங்கள் மற்றும் கடல் உணவுப் பொருட்களை ஏற்றுமதி செய்பவர்களுக்கு, இந்த நேரடி பாதை ஒரு வரப்பிரசாதமாக அமையும். இது இந்திய தயாரிப்புகளை உலகச் சந்தையில் குறைந்த விலையில் போட்டியிட உதவும்.
ஒருங்கிணைந்த உள்கட்டமைப்பு
இந்த புதிய கப்பல் சேவை, கொச்சி முனையத்தில் உள்ள கேரளாவின் முதல் Free Trade Warehousing Zone உடன் இணைந்து செயல்படுகிறது. இதனால் ஒரே இடத்தில் போர்ட் ஹேண்ட்லிங் மற்றும் வேர்ஹவுசிங் வசதிகளைப் பெற முடியும். இது சரக்கு பரிமாற்றத்தை (Export-Import) மேலும் வேகப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. நீண்ட கால அடிப்படையில், இந்த சேவை இந்திய துறைமுகங்களின் செயல்திறனை உயர்த்தி, உலகளாவிய வர்த்தக போட்டியில் இந்தியாவை வலுப்படுத்தும்.
