முதல் போயிங் 787 புதுப்பித்தல் நிறைவு
இந்த $400 மில்லியன் திட்டத்தின் கீழ், மொத்தம் 26 போயிங் 787 ட்ரீம்லைனர் விமானங்கள் படிப்படியாக புதுப்பிக்கப்பட உள்ளன. அதன் முதல் கட்டமாக, VT-ANT என்ற பதிவெண் கொண்ட விமானம் அமெரிக்காவில் வைத்து முழுமையாக புதிய இன்டீரியர் மற்றும் ஏர்லைன்ஸின் புதிய லோகோவுடன் (Livery) தயார் நிலையில் வெளிவந்துள்ளது.
புதிய கேபினில் என்னென்ன சிறப்புகள்?
இந்த விமானத்தின் கேபின் 3 விதமான வகுப்புகளாக பிரிக்கப்பட்டுள்ளது. பிசினஸ் கிளாஸில் 20 தனியறைகள் (private suites), ஸ்லைடிங் டோர் மற்றும் ஃபிளாட் பெட் வசதியுடன் வந்துள்ளன. இது சர்வதேச முன்னணி விமான நிறுவனங்களுக்கு இணையாக இருக்கும். புதிய பிரீமியம் எகனாமி பிரிவில் 25 இருக்கைகள் கூடுதல் இடவசதியுடன் அமைக்கப்பட்டுள்ளது. முக்கிய எகனாமி கேபினில் 205 பயணிகள் அமரலாம். நவீன சமையலறை (Galleys), கழிப்பறைகள் (lavatories) மற்றும் புதிய இன்-ஃப்ளைட் என்டர்டெயின்மென்ட் சிஸ்டமும் இதில் அடங்கும்.
$400 மில்லியன் முதலீட்டுத் திட்டம்
இந்த விமானத்தை முழுமையாக மாற்றி அமைக்க 45 நாட்கள் ஆனது. இதற்கு 12,800 க்கும் அதிகமான மனித-மணிநேரங்கள் (man-hours) தேவைப்பட்டுள்ளது. இது ஏர் இந்தியா தனது பழைய விமானங்களை நவீனமயமாக்கும் $400 மில்லியன் முதலீட்டின் ஒரு பகுதியாகும். அடுத்த வருடத்தில் மேலும் 25 போயிங் 787 விமானங்களை மேம்படுத்த ஏர் இந்தியா இலக்கு வைத்துள்ளது.
டாடா குழுமத்தின் உலகளாவிய கனவு
இந்த முழு புதுப்பித்தல் திட்டமும் 2027க்குள் முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஐரோப்பா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா போன்ற சர்வதேச வழித்தடங்களில் 300க்கும் மேற்பட்ட வாராந்திர விமானங்களில் பயண அனுபவத்தை இது மேம்படுத்தும். டாடா குழுமத்தின் (Tata Group) கீழ் ஏர் இந்தியாவை ஒரு முன்னணி உலகளாவிய விமான நிறுவனமாக மாற்றியமைக்கும் இந்த பிரம்மாண்ட முயற்சியில் இது ஒரு முக்கிய அங்கமாகும்.
