இந்திய விமானப்படையின் ஓய்வு பெற்ற குரூப் கேப்டன் Abhinandan Varthaman, தனியார் விமான நிறுவனமான FLY91-ல் விமானியாக இணைந்துள்ளார். கோவாவை தலைமையிடமாகக் கொண்ட இந்த நிறுவனம், இரண்டாம் மற்றும் மூன்றாம் நிலை நகரங்களை இணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது.
இந்திய விமானப்படையின் போர்க்கள நாயகன் Abhinandan Varthaman, தனது ஓய்வுக்குப் பிறகு தற்போது சிவில் ஏவியேஷன் துறையில் தனது இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கியுள்ளார். மார்ச் 2026-ல் இந்திய விமானப்படையிலிருந்து ஓய்வு பெற்ற அவர், ஆகஸ்ட் 2026 முதல் வணிக ரீதியான விமான சேவையில் தனது பணியைத் தொடங்கியுள்ளார்.
FLY91 நிறுவனத்தின் பின்னணி
கோவாவை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் இந்த தனியார் விமான நிறுவனம், Manoj Chacko மற்றும் Harsha Raghavan ஆகியோரால் தொடங்கப்பட்டது. ATR 72-600 வகை விமானங்களைப் பயன்படுத்தி, கோவா மற்றும் ஹைதராபாத்தை மையமாக வைத்து பல நகரங்களை இணைத்து வருகிறது. முதலீட்டாளர்கள் கவனத்திற்கு, இந்த நிறுவனம் தற்போது தனியார் வசம் உள்ளது. அதாவது, இது பங்குச்சந்தையில் பட்டியலிடப்படவில்லை, எனவே இதில் பொதுப் பங்குகள் அல்லது டிரேடிங் வாய்ப்புகள் இல்லை.
நிதி சவால்கள் மற்றும் இலக்குகள்
விமான போக்குவரத்துத் துறை அதிக முதலீடு தேவைப்படும் ஒரு துறையாகும். எரிபொருள் விலை ஏற்றத்தாழ்வு மற்றும் அதிக செயல்பாட்டுச் செலவுகளால், 2025 நிதி ஆண்டில் இந்நிறுவனம் ₹67.7 கோடி நஷ்டத்தை சந்தித்துள்ளது. இருப்பினும், 2027 நிதி ஆண்டிற்குள் லாபத்தை நோக்கி (Cash break-even) பயணிக்க நிறுவனம் தீவிர முயற்சியில் இறங்கியுள்ளது.
2019-ம் ஆண்டு நடந்த பாலகோட் தாக்குதலின் போது வீரதீரச் செயலுக்காக 'வீர் சக்ரா' விருது பெற்ற அபிநந்தன், இப்போது போர் விமானத்திற்குப் பதிலாக பயணிகள் விமானத்தை இயக்கும் பொறுப்பை ஏற்றுள்ளார். இந்தியாவின் பிராந்திய விமான சேவைத் துறையில் FLY91-ன் வளர்ச்சி மற்றும் செயல்பாடுகள் தற்போது கவனிக்கத்தக்கதாக மாறியுள்ளது.
