வியட்நாம் நாடு, வருகிற 2026 டிசம்பரில் வரலாற்றிலேயே மிக பிரம்மாண்டமான இந்திய திருமணத்தை நடத்த தயாராகி வருகிறது. சுமார் ₹40 கோடி (5 மில்லியன் டாலர்) பட்ஜெட்டில் நடக்கும் இந்த 5 நாள் விழாவில் 1,400 விருந்தினர்கள் பங்கேற்கின்றனர். இது, ஆடம்பர இந்திய திருமணங்களுக்கு வியட்நாம் ஒரு முக்கிய இடமாக மாறி வருவதை காட்டுகிறது.
$5 மில்லியன் டாலர் பட்ஜெட்டில் திருமணம்!
வியட்நாம் நாடு, 2026 டிசம்பரில் இதுவரை கண்டிராத மிகப்பெரிய இந்திய திருமணத்தை நடத்த ஏற்பாடு செய்து வருகிறது. இந்தியாவைச் சேர்ந்த ஒரு ஜோடி, தங்கள் ஆடம்பரமான 5 நாள் திருமண விழாவிற்காக வியட்நாமின் 'Nha Trang' நகரைத் தேர்ந்தெடுத்துள்ளனர். இது, சர்வதேச அளவில் நடக்கும் திருமண விழாக்களுக்கு வியட்நாம் ஒரு முக்கிய தேர்வாக மாறி வருவதை காட்டுகிறது.
இந்த பிரம்மாண்ட திருமணத்திற்காக மட்டும் சுமார் 130 பில்லியன் வியட்நாமிய டாங் (VND), அதாவது தோராயமாக 5 மில்லியன் அமெரிக்க டாலர் (₹40 கோடி) செலவிட திட்டமிடப்பட்டுள்ளது.
600 ஊழியர்கள், 1,400 விருந்தினர்கள்!
இந்த மாபெரும் விழாவில் சுமார் 1,400 விருந்தினர்கள் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்காக 600க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். திருமண விழாக்கள் 'Vinpearl Nha Trang' மற்றும் 'Nha Trang Marriott Resort & Spa' போன்ற நட்சத்திர ஹோட்டல்களில் நடைபெற உள்ளன.
இந்த விழாவை வியட்நாமின் 'Blue Lemon Vietnam' நிறுவனம், சர்வதேச குழுக்களுடன் இணைந்து நடத்துகிறது. இது, பெரிய அளவிலான நிகழ்ச்சிகளை ஒருங்கிணைக்கும் உள்ளூர் சுற்றுலா மற்றும் ஹோட்டல் துறையின் திறனை வெளிப்படுத்துகிறது.
இந்திய சுற்றுலா பயணிகளின் ஆர்வம் அதிகரிப்பு
சமீப காலமாக, இந்திய சுற்றுலா பயணிகள் வியட்நாமை அதிகம் விரும்பி வருகின்றனர். 2025 ஆம் ஆண்டில் மட்டும் சுமார் 7.5 லட்சம் (750,000) இந்தியர்கள் வியட்நாமுக்கு வந்துள்ளனர். இது கடந்த ஆண்டை விட கணிசமான உயர்வாகும்.
ஆடம்பர திருமண சுற்றுலா - ஒரு புதிய வருவாய்
உயர்தர திருமண சுற்றுலா, வியட்நாமின் ஹோட்டல் துறைக்கு ஒரு முக்கியமான வருவாய் ஆதாரமாக மாறி வருகிறது. ஆடம்பர ஹோட்டல்கள், நிகழ்ச்சி மேலாண்மை நிறுவனங்கள் மற்றும் போக்குவரத்து சேவைகளுக்கு இது ஒரு பொன்னான வாய்ப்பாக அமைந்துள்ளது. இந்திய திருமணங்களுக்கான பிரத்யேக உணவு தேவைகள், கலாச்சார பழக்கவழக்கங்கள் மற்றும் தேவையான இதர வசதிகளை செய்து கொடுப்பதில் உள்ளூர் நிறுவனங்கள் கவனம் செலுத்துகின்றன.
சவால்களும், எதிர்காலமும்
இருப்பினும், இத்தகைய பெரிய நிகழ்ச்சிகளை நடத்துவதில் சில சவால்களும் உள்ளன. சர்வதேச விமான சேவைகள், சிறப்பு உணவு ஏற்பாடுகள் மற்றும் முக்கிய நபர்களின் தனியுரிமை தேவைகள் போன்றவற்றை கவனமாக கையாள வேண்டும். ஒரு முறை நடக்கும் நிகழ்ச்சிகளைத் தாண்டி, நீண்ட காலத்திற்கு இதுபோன்ற உயர் மதிப்புள்ள சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் வகையில் நிலையான உள்கட்டமைப்பை உருவாக்குவது வியட்நாமின் சுற்றுலாத் துறையின் முக்கிய குறிக்கோளாக இருக்கும்.
