வரி லாஜிக் சொதப்பலால் சரக்கு செலவு உயர்வு!
இந்த பிரச்சனையின் முக்கிய காரணம், தற்போதுள்ள சரக்கு மற்றும் சேவை வரி (GST) அமைப்பில் உள்ள 'இன்வெர்ட்டட் டியூட்டி' (Inverted Duty) முறைதான். பாலியஸ்டர் உற்பத்தியில் முக்கிய மூலப்பொருளான பாலிஎத்திலீன் டெரெப்தாலேட் (PET) பாலிமர்களுக்கு 18% GST விதிக்கப்படுகிறது. ஆனால், இதன் மூலம் தயாரிக்கப்படும் ஃபினிஷ்டு பாலியஸ்டர் யார்களுக்கு வெறும் 5% GST மட்டுமே விதிக்கப்படுகிறது. இதனால், உற்பத்தியாளர்கள் தங்கள் மூலப்பொருட்களுக்கு அதிக வரி செலுத்த வேண்டியுள்ளது.
இதேபோல, விஸ்கோஸ் ஸ்டேபிள் ஃபைபர் (VSF) உற்பத்திக்கும் 18% GST கொண்ட ரேயான்-கிரேடு மரக்கூழ் (Rayon-grade wood pulp) முக்கிய மூலப்பொருளாக உள்ளது. ஃபினிஷ்டு VSFக்கு 5% GST மட்டுமே. இந்த வரி வித்தியாசம், உள்நாட்டு நிறுவனங்களின் உற்பத்தி செலவை அதிகரிக்கிறது.
வெளிநாட்டு போட்டியாளர்களுடன் விலை போட்டி சிக்கல்
மேலும், ஆசியான் (ASEAN) நாடுகளிலிருந்து விஸ்கோஸ் ஸ்டேபிள் ஃபைபர் (VSF) இறக்குமதிக்கு எந்தவித வரியும் இல்லை. ஆனால், இந்திய உற்பத்தியாளர்கள் தங்கள் முக்கிய மூலப்பொருளான மரக்கூழுக்கு சுமார் 2.5% மறைமுக வரியைச் செலுத்த வேண்டியுள்ளது. இதனால், இறக்குமதியாகும் பொருட்கள் மலிவாகக் கிடைக்கின்றன.
சர்வதேச அளவில், இந்தோனேசியா போன்ற நாடுகளில், சல்பர் (Sulphur) மற்றும் இயற்கை எரிவாயு (Natural Gas) போன்ற அத்தியாவசிய மூலப்பொருட்களுக்கு இறக்குமதி வரி இல்லாததால், இந்திய நிறுவனங்களை விட அவர்களுக்கு உற்பத்தி செலவு மிகவும் குறைவாக உள்ளது. சமீபத்தில், VSF-க்கான தரக் கட்டுப்பாட்டு உத்தரவுகள் (Quality Control Orders) திரும்பப் பெறப்பட்டதால், குறைந்த தரத்திலான இறக்குமதி பொருட்கள் இந்திய சந்தையில் குவியும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலை, உள்நாட்டு உற்பத்தியை மேலும் பாதிக்கும்.
போக்குவரத்து செலவு மற்றும் கொள்கை தாமதங்கள்
இவற்றோடு, சீனாவின் ஒருங்கிணைந்த தொழில்துறை அமைப்புகளைப் போலல்லாமல், இந்தியாவின் டெக்ஸ்டைல் உற்பத்தி பல மாநிலங்களில் பரவிக்கிடக்கிறது. இது, போக்குவரத்து மற்றும் செயல்பாட்டு செலவுகளை (Logistical inefficiencies) அதிகரிக்கிறது. டைரக்டரேட் ஜெனரல் ஆஃப் டிரேட் ரெமெடீஸ் (DGTR) அமைப்பு, இந்த இன்வெர்ட்டட் டியூட்டி போன்ற பிரச்சனைகளை சரிசெய்ய பல பரிந்துரைகளை வழங்கியும், அவை இதுவரை முழுமையாக செயல்படுத்தப்படவில்லை என்றும் கூறப்படுகிறது. இந்த அனைத்து காரணங்களாலும், இந்தியாவின் மேன்-மேட் ஃபைபர் துறை உலக சந்தையில் தனது போட்டித்தன்மையை இழந்து வருகிறது. இந்த அடிப்படை பிரச்சனைகளுக்கு தீர்வு காணாவிட்டால், ஏற்றுமதியில் வளர்ச்சி காண்பதும், பொருளாதார பங்களிப்பை அதிகரிப்பதும் கடினமாகும்.