இந்திய டெலிகாம் நிறுவனங்கள் இனி AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தும்போது கடுமையான விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் என TRAI தலைவர் அனில் குமார் லஹோட்டி உத்தரவிட்டுள்ளார். இது முறையற்ற செயல்பாடுகளை தடுக்கவும், டிஜிட்டல் மோசடிகளை கட்டுப்படுத்தவும் கொண்டு வரப்பட்டுள்ளது.
டெல்லியில் நடந்த CO.AI 2026 நிகழ்ச்சியில் பேசிய TRAI தலைவர் அனில் குமார் லஹோட்டி, டெலிகாம் துறையில் Artificial Intelligence பயன்பாடு அதிகரிக்கும் வேளையில், அதற்குப் பொறுப்புக்கூற வேண்டியது அவசியம் என வலியுறுத்தியுள்ளார். இனி வரும் காலங்களில், முக்கிய முடிவுகள் எடுக்கப்படும்போது மனித தலையீடு (Human Intervention) கண்டிப்பாக இருக்க வேண்டும் என்றும், தணிக்கைக்காக (Audit) அந்த முடிவுகளைப் பதிவு செய்ய வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.
நிறுவனங்களுக்கு என்ன சவால்?
Reliance Jio, Bharti Airtel, மற்றும் Vodafone Idea போன்ற நிறுவனங்கள் தற்போது நெட்வொர்க் மேம்பாட்டிற்கும், வாடிக்கையாளர் சேவைக்கும் AI-ஐ பெருமளவில் பயன்படுத்தி வருகின்றன. ஆனால், இப்போது கொண்டு வரப்பட்டுள்ள இந்த புதிய விதிமுறைகளால், தொழில்நுட்ப செலவுகள் (Operational Costs) அதிகரிக்க வாய்ப்புள்ளது. AI முடிவுகளைக் கண்காணிக்கத் தனியாகக் குழுக்களையும், மேம்படுத்தப்பட்ட பாதுகாப்பு கட்டமைப்புகளையும் அமைக்க வேண்டியது கட்டாயமாகும்.
முதலீட்டாளர்கள் கவனத்திற்கு
AI மூலம் நடக்கும் தவறுகளைக் குறைக்க நிறுவனங்கள் மேற்கொள்ளும் இந்த புதிய முதலீடுகள், குறுகிய காலத்தில் நிறுவனங்களின் லாப வரம்பில் (Profit Margin) அழுத்தத்தை ஏற்படுத்தலாம். மேலும், சைபர் மோசடிகளைத் தடுக்க நிதி நிறுவனங்களுடன் இணைந்து செயல்பட வேண்டிய கட்டாயம் ஏற்படுவதால், நிறுவனங்களின் செயல்பாட்டுத் திறன் மற்றும் செலவு மேலாண்மை எப்படி மாறப்போகிறது என்பதைப் பொறுத்துதான் பங்கின் நகர்வுகள் அமையும்.
