கேமிங் துறையில் இருந்து முழுமையாக வெளியேறுகிறது Gurugram-ஐ சேர்ந்த Zupee நிறுவனம். இனி முழுக்க முழுக்க Artificial Intelligence (AI) தொழில்நுட்பத்தில் கவனம் செலுத்தப்போவதாக அறிவித்துள்ளது.
Ludo, Snakes and Ladders போன்ற புகழ்பெற்ற போர்டு கேம்களை வழங்கி வந்த Zupee, தற்போது தனது கேமிங் செயல்பாடுகளை முழுவதுமாக நிறுத்திக்கொள்வதாக அறிவித்துள்ளது. ஆகஸ்ட் 2025-ல் தொடங்கிய இந்த நிறுவன மறுசீரமைப்பு நடவடிக்கை, இப்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.
ஏன் இந்த மாற்றம்?
இந்திய கேமிங் துறையில் ஏற்பட்ட ஒழுங்குமுறை மாற்றங்கள் (Regulatory changes) நிறுவனத்திற்கு பெரும் சவாலாக அமைந்தன. ஏற்கனவே இருந்த Real-money கேமிங் மாடலில் இருந்து, Free-to-play முறைக்கு மாறியும் பலன் கிடைக்கவில்லை. இதனால் செப்டம்பர் 2025 மற்றும் ஜனவரி 2026 ஆகிய காலக்கட்டங்களில் பணியாளர்கள் குறைப்பு நடவடிக்கைகளை நிறுவனம் மேற்கொண்டது. கேமிங்கிற்கு பதிலாக Esport, Microdramas மற்றும் Astrology என பல துறைகளை முயற்சி செய்தும், இறுதியாக AI-தான் சிறந்த வழி என முடிவு செய்யப்பட்டுள்ளது.
AI-ல் என்ன செய்யப்போகிறார்கள்?
நிறுவனத்தின் நிறுவனர்களான Dilsher Singh Malhi மற்றும் Siddhant Saurabh, தங்கள் குழுவின் தொழில்நுட்ப அனுபவத்தை வைத்து இந்திய சந்தைக்கென பிரத்யேகமான AI டூல்களை உருவாக்க திட்டமிட்டுள்ளனர். Tier-2 மற்றும் Tier-3 நகரங்களில் உள்ள பயனர்களுக்கு சேவை செய்த அனுபவம், புதிய AI முயற்சியில் தங்களுக்கு உதவும் என அவர்கள் நம்புகின்றனர்.
முதலீட்டாளர்களின் பார்வை
WestCap Group, Tomales Bay Capital மற்றும் Nepean Capital போன்ற பெரிய முதலீட்டாளர்களின் ஆதரவு Zupee-க்கு இருந்தாலும், கேமிங் நிறுவனத்திலிருந்து AI நிறுவனமாக மாறுவது எளிதான காரியம் அல்ல. இந்திய AI சந்தையில் ஏற்கனவே உலகளாவிய நிறுவனங்கள் போட்டியிட்டு வருவதால், Zupee-ன் முதல் தயாரிப்பு மற்றும் அதற்கான வருவாய் திட்டம் எப்படி அமையும் என்பதுதான் தற்போதைய பெரிய கேள்வி. கடந்த 18 மாதங்களாக கடும் சரிவை சந்தித்துள்ள இந்த நிறுவனம், இந்த புதிய பாதையில் மீண்டும் மீண்டு வருமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
