அமெரிக்க அரசு TCS, Infosys, Wipro, HCL மற்றும் Microsoft உள்ளிட்ட 8 முன்னணி டெக் நிறுவனங்களை PERM ப்ரோக்ராமிலிருந்து நீக்கியுள்ளது. இதனால் கிரீன் கார்டு (Green Card) பெறும் வாய்ப்பில் சிக்கல் ஏற்பட்டுள்ளதால், முதலீட்டாளர்கள் மத்தியில் கவலை அதிகரித்துள்ளது.
அமெரிக்க அரசு கடந்த அக்டோபர் 8, 2026 அன்று, முன்னணி டெக் நிறுவனங்களின் மீது ஒரு அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. அந்நாட்டின் தொழிலாளர் துறையின் கீழ் இயங்கும் 'Permanent Labor Certification' (PERM) திட்டத்திலிருந்து Microsoft, Adobe, TCS, Infosys, Wipro, HCL Technologies, Cognizant மற்றும் Capgemini ஆகிய 8 நிறுவனங்களை தற்காலிகமாக நீக்கியுள்ளது.
திறமையாளர்களை தக்கவைப்பதில் சிக்கல்
பொதுவாக ஒரு வெளிநாட்டு ஊழியர் அமெரிக்காவில் நிரந்தரமாக வசிக்க (Green Card) இந்த PERM திட்டம் தான் முதல் படி. H-1B விசா வைத்திருப்பவர்களுக்கு இந்த திட்டம் ஒரு பெரிய கவர்ச்சிகரமான விஷயமாகும். இந்த நிறுவனங்கள் மீது விதிக்கப்பட்டுள்ள இந்த தடையால், இனி புதிதாக கிரீன் கார்டு விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கவோ அல்லது ஏற்கனவே உள்ள விண்ணப்பங்களைச் செயல்படுத்தவோ முடியாது. இது நிறுவனங்களின் ஆள்சேர்ப்பு செலவை அதிகரிப்பதோடு, திறமையான ஊழியர்கள் வெளியேறும் அபாயத்தையும் (Talent Attrition) உருவாக்கியுள்ளது.
விசாரணைக்கு பின்னணியில் இருப்பது என்ன?
இந்த விவகாரம் வெறும் நிர்வாக ரீதியானது மட்டுமல்ல, இது ஒரு பெரிய விசாரணை. வேலைவாய்ப்பு மோசடி, ஊதியக் குறைப்பு மற்றும் உள்ளூர் தொழிலாளர்களைப் புறக்கணித்தல் போன்ற குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. குறிப்பாக, Microsoft போன்ற நிறுவனங்கள் உள்ளூர் ஊழியர்களை பணிநீக்கம் செய்துவிட்டு, அதே வேலைக்கு வெளிநாட்டு ஊழியர்களை நியமித்ததாக எழுந்த புகார்கள் இந்த கடுமையான நடவடிக்கைக்குத் தூண்டுதலாக அமைந்தன.
முதலீட்டாளர்கள் கவனிக்க வேண்டியவை
தற்போதைய சூழலில், நிறுவனங்களின் வருவாய் அல்லது ஒப்பந்தங்களுக்கு நேரடி பாதிப்பு இல்லை என்றாலும், நீண்டகால செயல்பாட்டு கட்டமைப்பில் இது பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும். குறிப்பாக அமெரிக்க அரசின் இந்த கண்காணிப்பு, கல்வி நிறுவனங்களிலும் (J-1 விசா விவகாரம்) விரிவடைந்துள்ளது. நிறுவனங்கள் இந்த தடையை சட்டரீதியாக எதிர்கொள்ளப் போகின்றனவா அல்லது தங்களின் ஹயரிங் (Hiring) உத்திகளை மாற்றப் போகின்றனவா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
