அமெரிக்காவின் சாஃப்ட்வேர் துறை இந்த ஆண்டின் ஆரம்பத்தில் சந்தித்த சரிவிலிருந்து மீண்டு, நவம்பர் 2025-க்கு பிறகு மிக உயர்ந்த நிலையை எட்டியுள்ளது. ஏஐ (AI) தொழில்நுட்பம் சாஃப்ட்வேர் கருவிகளை அழித்துவிடும் என்ற பயம் நீங்கியதால், முதலீட்டாளர்கள் மீண்டும் டெக் பங்குகளை நோக்கி படையெடுத்துள்ளனர்.
அமெரிக்க சாஃப்ட்வேர் சந்தையில் நிலவிய 'SaaSpocalypse' என்ற அச்சம் மறைந்து, மீண்டும் ஏற்றம் சூடுபிடித்துள்ளது. செவ்வாய்க்கிழமை அன்று S&P 500 Software and Services இண்டெக்ஸ் 1.3% உயர்ந்துள்ளது. நடப்பாண்டின் முதல் காலாண்டில் இத்துறை 26% சரிவை சந்தித்தது. அந்த காலகட்டத்தில், நிறுவனங்கள் தாங்களாகவே ஏஐ கருவிகளை உருவாக்கி சாஃப்ட்வேர் நிறுவனங்களை புறக்கணித்துவிடுமோ என்ற பயம் முதலீட்டாளர்களிடையே இருந்தது. ஆனால், தற்போதைய ரிசல்ட்கள் அந்த பயத்தை பொய்யாக்கியுள்ளன.
லாப வளர்ச்சி அதிகரிப்பு
இந்தத் துறையின் மீதான நம்பிக்கை வலுத்ததற்கு முக்கிய காரணம் மேம்பட்ட நிதி கணிப்புகள் தான். இந்த ஆண்டுக்கான லாப வளர்ச்சி முன்னதாக 13.8% ஆக இருந்த நிலையில், தற்போது அது 20.6% ஆக உயர்த்தப்பட்டுள்ளது. Salesforce, ServiceNow, மற்றும் Accenture போன்ற ஜாம்பவான்கள் ஏஐ-யை தங்களது தயாரிப்புகளில் சரியாக இணைத்து, வருவாயைப் பெருக்கியுள்ளன.
சைபர் செக்யூரிட்டி பங்குகள் அபாரம்
AI பயன்பாடு அதிகரித்துள்ளதால், சைபர் செக்யூரிட்டி துறைக்கு அதிக முக்கியத்துவம் கிடைத்துள்ளது. இதன் விளைவாக, CrowdStrike, Fortinet, மற்றும் Palo Alto Networks போன்ற நிறுவனங்கள் 100%-க்கும் அதிகமான வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளன. இது இந்திய ஐடி நிறுவனங்களுக்கும் சாதகமான சூழலை உருவாக்கியுள்ளது, ஏனெனில் உலகளாவிய நிறுவனங்களின் செலவுகள் அதிகரிக்கும் போது, இந்தியாவின் ஐடி சேவைகளுக்கான தேவை தானாகவே அதிகரிக்கும்.
வரப்போகும் சவால்கள்
இருப்பினும், சந்தை வல்லுநர்கள் எச்சரிக்கையையும் விடுக்கின்றனர். 2027-ம் ஆண்டில் ஏஐ உருவாக்க செலவுகள் குறைந்தால், புதிய நிறுவனங்களின் வருகையால் கடும் போட்டி நிலவும். இது பாரம்பரிய சந்தா (Subscription) முறையிலான வணிகத்தை பாதிக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
