Truecaller நிறுவனம் இந்தியாவில் 'Web Scam Checker' என்ற புதிய வசதியை கொண்டு வந்துள்ளது. இதன் மூலம் பயனர்கள் ஆப் டவுன்லோட் செய்யாமலேயே லிங்க்குகள் மற்றும் போன் நம்பர்களை சரிபார்க்க முடியும்.
Truecaller தனது புதிய இணையதள சேவையான 'Scam Checker'-ஐ இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. பயனர்கள் எந்த ஒரு பதிவு அல்லது லாகின் (Login) செய்யாமலேயே, பிரவுசர் வழியாகவே சந்தேகத்திற்குரிய போன் எண்கள் மற்றும் லிங்க்குகளை செக் செய்து கொள்ளலாம். இது முழுக்க முழுக்க நிறுவனத்தின் வசம் உள்ள டேட்டாபேஸ் மற்றும் மக்களிடம் இருந்து பெறப்பட்ட தரவுகளை கொண்டு இயங்குகிறது.
மோசடிகளுக்கு எதிராக புதிய வியூகம்
தற்போது ஸ்கேமர்கள் வாய்ஸ் கால்களை தாண்டி, வாட்ஸ்அப் போன்ற என்க்ரிப்ட் செய்யப்பட்ட மெசேஜிங் பிளாட்ஃபார்ம்களுக்கு மாறிவிட்டனர். இதை தடுப்பதற்காகவே இந்த Web Scam Checker உருவாக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு மாதமும் சுமார் 1.4 கோடி தேடல்கள் இது போன்ற சரிபார்ப்புக்காக நடப்பதால், இந்த சேவையை முறையான டூலாக மாற்ற நிறுவனம் முடிவு செய்துள்ளது.
போட்டி மற்றும் அரசு கெடுபிடி
இந்தியாவில் 35 கோடிக்கும் அதிகமான பயனர்களை கொண்டுள்ள Truecaller-க்கு, தற்போது கூகுள் மற்றும் ஆப்பிள் போன்ற நிறுவனங்களின் சொந்த ஸ்பேம் டிடெக்ஷன் வசதிகள் கடும் சவாலாக இருக்கின்றன. இவை தவிர, அரசு கொண்டு வரத் துடிக்கும் Calling Name Presentation (CNAP) மற்றும் ஸ்பேம் தரவுகளை டெலிகாம் நிறுவனங்களுடன் பகிர்ந்து கொள்ளும் கட்டாய உத்தரவுகள் நிறுவனத்திற்கு பெரும் நெருக்கடியை கொடுத்துள்ளன.
முதலீட்டாளர்கள் கவனத்திற்கு
ஒரே பயன்பாடு கொண்ட ஆப் என்ற நிலையிலிருந்து, பாதுகாப்பு சார்ந்த 'Intelligence Provider' ஆக தன்னை மாற்றிக்கொள்ள Truecaller முயன்று வருகிறது. இந்த இணையதள சேவை புதிய பயனர்களை ஈர்க்குமா, அல்லது OS-லேயே கிடைக்கும் பாதுகாப்பு வசதிகளுக்கு முன்னால் இது எடுபடுமா என்பதுதான் இப்போதைய மில்லியன் டாலர் கேள்வி.
