Citizen Lab வெளியிட்ட அதிர்ச்சி அறிக்கை: Candiru மற்றும் Bindecy போன்ற நிறுவனங்கள், டிஜிட்டல் விளம்பர தளங்களை பயன்படுத்தி, எந்த வித கிளிக்-கும் இன்றி ரகசியமாக சாதனங்களை ஹேக் செய்வதாக தகவல் வெளியாகியுள்ளது.
டொராண்டோ பல்கலைக்கழகத்தின் Citizen Lab ஆய்வாளர்கள், அரசாங்க ஆதரவு பெற்ற ஸ்பைவேர் (Spyware) நிறுவனங்கள் டிஜிட்டல் விளம்பர நெட்வொர்க்குகளை துஷ்பிரயோகம் செய்வதை கண்டுபிடித்துள்ளனர். இதில் இஸ்ரேலைச் சேர்ந்த Discover-Tech நிறுவனம் முக்கிய பங்கு வகிப்பது தெரியவந்துள்ளது. இவர்களின் Controlium என்ற தளம் மூலம், Candiru மற்றும் Bindecy போன்ற நிறுவனங்கள் தங்களின் தீங்கிழைக்கும் மென்பொருட்களை விளம்பரங்கள் வாயிலாகப் பரப்பியுள்ளன.
ஏன் இது ஆபத்தானது?
இது 'Zero-click' முறையில் செயல்படுவதால், பயனர்கள் எந்த ஒரு லிங்க்-கையும் கிளிக் செய்ய வேண்டிய அவசியம் இல்லை. விளம்பரங்கள் பின்னணியில் இயங்கும்போது, தானாகவே சாதனங்கள் ஹேக் செய்யப்படுகின்றன. இதனால் சாதாரண பயனர்கள் இந்தத் தாக்குதலைக் கண்டறிவது மிகவும் கடினம்.
யாரை குறிவைக்கிறார்கள்?
ஆய்வின்படி, Al Jazeera செய்தி நிறுவனத்தில் 45 விண்டோஸ் கணினிகள் பாதிக்கப்பட்டுள்ளன. மேலும், International Atomic Energy Agency மற்றும் International Criminal Court போன்ற முக்கிய சர்வதேச அமைப்புகளின் சாதனங்களும் இவர்களின் இலக்காக இருந்துள்ளன. விளம்பரங்களின் 'ரியல்-டைம் பிட்டிங்' (Real-time bidding) தொழில்நுட்பத்தை ஹேக்கர்கள் தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்தி, உயர்மட்ட அதிகாரிகளை எளிதில் குறிவைக்கின்றனர்.
இந்தத் தாக்குதல்கள் தொழில்நுட்ப உலகிற்கு மிகப்பெரிய சவாலாக மாறியுள்ளன. பாதுகாப்பு நிபுணர்கள், இணையப் பயனர்கள் விளம்பர டிராக்கிங்கை (Ad tracking) முடக்குமாறும், தரமான ஆட்-பிளாக்கர்களைப் பயன்படுத்துமாறும் எச்சரித்துள்ளனர்.
