ShinyHunters என்ற சைபர் குற்றக் கும்பல் FBI அமைப்பின் முக்கியமான தனிநபர் தகவல்களை திருடியதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. Oracle PeopleSoft சர்வர் மற்றும் Amazon கிளவுட் தளங்களில் ஏற்பட்ட ஓட்டைகளை பயன்படுத்தி இந்த ஊடுருவல் நடந்துள்ளது.
அமெரிக்காவின் மத்திய புலனாய்வு அமைப்பான FBI-ன் சர்வர்களில் சைபர் குற்றவாளிகள் கைவரிசை காட்டியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 'ShinyHunters' என்று தங்களை அழைத்துக்கொள்ளும் இந்த கும்பல், அரசு ஏஜெண்டுகள் மற்றும் வேலைக்கு விண்ணப்பித்தவர்களின் தனிப்பட்ட தகவல்களை திருடியுள்ளதாகக் கூறியுள்ளது. பாதுகாப்பு கருதி FBI தனது ஆட்சேர்ப்பு இணையதளங்களை தற்காலிகமாக முடக்கியுள்ளது.
ஊடுருவல் நடந்தது எப்படி?
இந்தத் தாக்குதலுக்கு முக்கிய காரணமாக இருப்பது Oracle நிறுவனத்தின் PeopleSoft சர்வரில் இருந்த ஒரு பலவீனம் (Vulnerability) ஆகும். அதன் வழியாக உள்ளே நுழைந்த ஹேக்கர்கள், அங்கிருந்து Amazon-ன் பாதுகாப்பான கிளவுட் கட்டமைப்பிற்குள் பாய்ந்துள்ளனர். முகவரி மற்றும் தனிப்பட்ட தொடர்பு விவரங்கள் திருடப்பட்டிருப்பது உளவுத்துறை வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
முதலீட்டாளர்கள் கவனத்திற்கு...
இந்தச் சம்பவம், உலகெங்கிலும் உள்ள கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஒரு எச்சரிக்கை மணியாகும். பெரிய நிறுவனங்கள் பயன்படுத்தும் சாப்ட்வேர் மற்றும் கிளவுட் பிளாட்ஃபார்ம்களில் ஒரு சிறிய ஓட்டை இருந்தாலும், அது மிகப்பெரிய பாதிப்பை உருவாக்கும் என்பதற்கு இது சாட்சி. எனவே, இனிவரும் காலங்களில் சைபர் செக்யூரிட்டி (Cybersecurity) தொடர்பான செலவினங்கள் நிறுவனங்களின் பட்ஜெட்டில் முக்கிய இடம்பிடிக்கும்.
இந்த ஆண்டில் FBI அமைப்பின் சிஸ்டம் ஹேக் செய்யப்படுவது இது இரண்டாவது முறையாகும். இது போன்ற சம்பவங்களால், இந்திய IT நிறுவனங்களுக்கு சைபர் பாதுகாப்பு தொடர்பான சேவைகளுக்கான தேவை சர்வதேச சந்தையில் மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
