முன்னாள் DeepMind ஆராய்ச்சியாளர்கள் தொடங்கியுள்ள Ricursive Intelligence நிறுவனம், AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி செமிகண்டக்டர் சிப் வடிவமைப்பு காலத்தை வருடங்களிலிருந்து வாரங்களாக குறைக்க திட்டமிட்டுள்ளது.
Anna Goldie மற்றும் Azalia Mirhoseini ஆகியோரால் தொடங்கப்பட்ட Ricursive Intelligence, செமிகண்டக்டர் துறையில் உள்ள மிகப்பெரிய தடையை உடைக்க முனைகிறது. பாரம்பரியமாக மனிதர்கள் பல ஆண்டுகள் எடுத்துக்கொள்ளும் சிப் வடிவமைப்பு பணிகளை, AI மூலம் மிக விரைவாக முடிக்க முடியும் என்பதே இவர்களின் திட்டம்.
ஏன் இந்த மாற்றத்திற்கு தேவை?
AI கம்ப்யூட்டிங் திறன் தேவையானது உலகளவில் மின்னல் வேகத்தில் அதிகரித்து வருகிறது. ஆனால் நவீன சிப்களை வடிவமைக்க அதிக நேரமும், பெரும் முதலீடும் தேவைப்படுகிறது. Ricursive Intelligence-இன் AI மாடல்கள், மனிதர்கள் கவனிக்கத் தவறும் நுணுக்கமான வடிவமைப்புகளை கண்டறிந்து, மின்சார சிக்கனம் மற்றும் செயல்திறனை (Efficiency) மேம்படுத்துகின்றன.
சந்தையில் போட்டி யாருடன்?
இந்த ஸ்டார்ட்-அப் நிறுவனம் தற்போது Electronic Design Automation (EDA) சந்தையில் கோலோச்சும் Synopsys மற்றும் Cadence Design Systems போன்ற ஜாம்பவான்களுக்கு நேரடிப் போட்டியை கொடுக்கிறது. ஏற்கனவே இந்த நிறுவனங்கள் AI கருவிகளை பயன்படுத்தி வந்தாலும், Ricursive-இன் தனித்துவமான அல்காரிதம்கள் எவ்வளவு தூரம் சிறப்பாக செயல்படும் என்பதே முதலீட்டாளர்களின் எதிர்பார்ப்பு.
கவனிக்க வேண்டிய ரிஸ்க்!
சிப் வடிவமைப்பில் 'Foundry Readiness' என்பது மிக முக்கியம். அதாவது, AI உருவாக்கும் டிசைன், TSMC அல்லது Samsung போன்ற பெரிய நிறுவனங்களின் தொழிற்சாலைகளில் எந்த பிழையும் இன்றி உற்பத்தி செய்யப்பட வேண்டும். இந்த தடையை உடைத்தால் மட்டுமே, உயிரியல் கம்ப்யூட்டிங் (Biological Computing) மற்றும் AR போன்ற புதிய துறைகளுக்குத் தேவையான அதிநவீன சிப்களை மலிவாக உருவாக்க முடியும்.
