ஸ்மார்ட்போன் சிப் சந்தையிலிருந்து AI மற்றும் டேட்டா சென்டர் நோக்கி கவனம் திருப்பும் Qualcomm, நவம்பர் மாதம் முதல் தனது உலகளாவிய பணியாளர் எண்ணிக்கையைக் குறைக்கத் தொடங்கியுள்ளது.
ஸ்மார்ட்போன் சிப் தயாரிப்பில் முன்னணியில் உள்ள Qualcomm, தனது வணிக மாதிரியை மாற்றியமைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக, நவம்பர் மாதம் முதல் உலகளவில் ஆட்குறைப்பு நடவடிக்கையைத் தொடங்கியுள்ளது. கம்பெனியின் செயல்திறனை மேம்படுத்துவதாக நிர்வாகம் கூறினாலும், ஸ்மார்ட்போன் சந்தையில் ஏற்பட்டுள்ள மந்தநிலை மற்றும் கன்ஸ்யூமர் எலக்ட்ரானிக்ஸ் துறையில் நிலவும் சரிவுதான் இதற்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.
பங்குகளின் சுமாரான செயல்பாடு
கடந்த ஓராண்டு காலப்பகுதியில், Qualcomm பங்குகளின் வளர்ச்சி முதலீட்டாளர்களை அதிருப்தியில் ஆழ்த்தியுள்ளது. 2026-ல் இதன் பங்குகள் வெறும் 1.5% மட்டுமே உயர்ந்துள்ளன. இதே காலகட்டத்தில், S&P 500 குறியீடு 12%-க்கும் மேல் உயர்ந்துள்ளது, மேலும் செமி கண்டக்டர் துறையின் முக்கிய குறியீடான Philadelphia Semiconductor Index சுமார் 60% வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது. சந்தையின் மற்ற நிறுவனங்களுடன் ஒப்பிடுகையில் Qualcomm-ன் பங்கு விலை பின்தங்கியே உள்ளது.
AI மற்றும் டேட்டா சென்டர் மீது பார்வை
தற்போது, ஆப்பிள் நிறுவனத்துடனான கூட்டணி மற்றும் ஸ்மார்ட்போன் சிப்களை நம்பியே Qualcomm-ன் வருவாய் உள்ளது. ஆனால், ஆப்பிள் நிறுவனத்திலிருந்து வரும் வருவாய் இனி குறைய வாய்ப்புள்ளதாக கணிப்புகள் தெரிவிக்கின்றன. எனவே, 2027-ம் நிதியாண்டுக்குள் ஸ்மார்ட்போன் அல்லாத பிற துறைகளில் இருந்து பெரும்பான்மையான வருவாயைப் பெற கம்பெனி திட்டமிட்டுள்ளது. இதற்காக செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் டேட்டா சென்டர் பிரிவுகளில் தீவிரமாக முதலீடு செய்து வருகிறது.
முதலீட்டாளர்கள் கவனிக்க வேண்டியவை
இந்த மாற்றத்தின் போது கம்பெனியின் லாப வரம்புகள் (Profit Margins) எப்படி இருக்கும் என்பதுதான் மில்லியன் டாலர் கேள்வி. டேட்டா சென்டர் துறையில் உள்ள கடும் போட்டி மற்றும் மெமரி சிப்களின் விலை உயர்வு போன்றவை சவாலாக இருக்கும். ஸ்மார்ட்போன் மூலம் வரும் வருவாய் குறையும் வேகத்தை விட, புதிய பிரிவுகளில் கம்பெனி வேகமான வளர்ச்சியைப் பெற வேண்டியது கட்டாயமாகும்.
