Qualcomm மற்றும் Arm Holdings இடையேயான ஒப்பந்த மோதல் டெலாவேர் ஃபெடரல் நீதிமன்றத்தில் இன்று தொடங்கியுள்ளது. பில்லியன் கணக்கான டாலர் மதிப்புள்ள இந்த ராயல்ட்டி விவகாரம், சிப் தயாரிப்பு நிறுவனங்களின் எதிர்காலத்தை மாற்றியமைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
டெலாவேர் ஃபெடரல் நீதிமன்றத்தில் இன்று தொடங்கியுள்ள இந்த வழக்கு, செமி கண்டக்டர் உலகின் பெரும் ஜாம்பவான்களான Qualcomm மற்றும் Arm Holdings இடையிலான விரிசலை வெளிச்சம் போட்டு காட்டியுள்ளது. ஸ்மார்ட்போன் மற்றும் டேட்டா சென்டர் சந்தைக்கு ஆதாரமாக விளங்கும் இந்த நிறுவனங்களுக்கிடையேயான இந்த மோதல், 5 நாட்கள் விசாரணையாக நடைபெற உள்ளது.
பில்லியன் டாலர் ராயல்ட்டி போர்
இந்த வழக்கில் Qualcomm மிக முக்கிய கோரிக்கையை முன்வைத்துள்ளது. Arm நிறுவனம் ஒப்பந்த விதிமுறைகளை மீறியதாக குற்றம் சாட்டியுள்ள Qualcomm, சுமார் 5 ஆண்டுகள் ராயல்ட்டி தொகையை வழங்காமல் நிறுத்தி வைக்கும் உரிமையைக் கேட்டுள்ளது. இது பில்லியன் டாலர் மதிப்பிலான விவகாரமாகும். Arm நிறுவனத்தைப் பொறுத்தவரை, SoftBank Group-ன் கட்டுப்பாட்டில் உள்ள இதன் வருவாயில், இந்த ராயல்ட்டி தொகை மிக முக்கியமான பங்கு வகிக்கிறது. நீதிமன்றம் Qualcomm-ன் கோரிக்கையை ஏற்றுக்கொண்டால், Arm-ன் எதிர்கால பணப்புழக்கம் மற்றும் வருவாயில் பெரும் நிச்சயமற்ற தன்மை உருவாகும்.
தொழில் நுட்பப் போட்டி
முன்பு ஒரு நடுநிலை சப்ளையராக இருந்த Arm, தற்போது சிப் டிசைன் துறையில் களமிறங்கி, அதன் வாடிக்கையாளர்களுடனேயே போட்டியாளராக மாறியுள்ளது. இதுவே இந்த மோதலுக்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. ஏற்கனவே 2022-ல் Nuvia நிறுவனம் தொடர்பான வழக்கில் இருவரும் மோதிக்கொண்ட நிலையில், தற்போதைய இந்த வழக்கு 2033 வரை செல்லக்கூடிய ஒப்பந்தத்தின் எதிர்காலத்தையே தீர்மானிக்கப்போகிறது.
முதலீட்டாளர்கள் கவனிக்க வேண்டியவை
இந்த வழக்கின் தீர்ப்பு, செமி கண்டக்டர் துறையின் உரிம ஒப்பந்தங்களுக்கு (Licensing contracts) ஒரு புதிய முன்னுதாரணமாக அமையும். Arm-க்கு எதிராகத் தீர்ப்பு வந்தால், அதன் பங்குகளில் பெரும் ஏற்ற இறக்கங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. அதே சமயம், Qualcomm-க்கு எதிராகத் தீர்ப்பு அமைந்தால், அதன் புதிய தயாரிப்பு திட்டங்களுக்கான தொழில்நுட்ப அணுகல் பாதிக்கப்படலாம். நீதிபதி Maryellen Noreika-வின் முடிவுகளைப் பொறுத்தே இந்த நிறுவனங்களின் அடுத்தக்கட்ட நகர்வுகள் இருக்கும்.
