சொந்த நாட்டு பணியாளர்களுக்குப் பதிலாக வெளிநாட்டு பணியாளர்களை நியமித்ததாக எழுந்த புகாரால், H-1B விசா வைத்திருப்பவர்களுக்கு கிரீன் கார்டு பெற்றுத்தரும் மத்திய அரசின் முக்கிய திட்டத்திலிருந்து Microsoft நீக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க அரசு திடீரென எடுத்த அதிரடி நடவடிக்கையால் Microsoft நிறுவனம் கடும் நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளது. H-1B விசா பணியாளர்களுக்கு கிரீன் கார்டு பெற்றுத்தரும் அரசுத் திட்டத்திலிருந்து Microsoft நீக்கப்பட்டுள்ளதாக அக்டோபர் 8, 2026 அன்று துணை அதிபர் JD Vance அறிவித்துள்ளார்.
முறைகேடு புகார் என்ன?
அமெரிக்க குடிமக்களுக்கு வேலைவாய்ப்புகளை வழங்காமல், வெளிநாட்டு பணியாளர்களை 1.5 : 1 என்ற விகிதத்தில் நிறுவனம் நியமித்துள்ளதாக புகார் எழுந்துள்ளது. இது நிரந்தர குடியுரிமைக்குத் தேவையான PERM எனப்படும் முறையான சான்றிதழ் செயல்முறையை நேரடியாக பாதித்துள்ளது. தகுதியுள்ள உள்நாட்டு பணியாளர்கள் இருக்கும்போது, வெளிநாட்டு பணியாளர்களை நியமித்து சந்தையை பாதித்ததாக மத்திய அரசு குற்றம் சாட்டியுள்ளது.
டெக் துறைக்கு வரும் சிக்கல்
இந்த விவகாரம் Microsoft-க்கு மட்டுமின்றி, ஒட்டுமொத்த டெக் துறைக்கும் ஒரு எச்சரிக்கையாகப் பார்க்கப்படுகிறது. ஏற்கனவே, செப்டம்பர் 2026 முதல், பணிநீக்கம் செய்த நிறுவனங்கள் புதிய H-1B விசாவிற்கு விண்ணப்பிக்கும் முன் கடுமையான சோதனைக்கு உள்ளாக வேண்டும் என விதிகள மாற்றப்பட்டுள்ளன. மேலும், சர்வதேச மாணவர்களுக்கான OPT திட்டத்தில் $70,000 வரை கட்டணம் வசூலிக்கும் திட்டமும் பரிசீலனையில் உள்ளது.
முதலீட்டாளர்கள் கவனத்திற்கு
இந்த கட்டுப்பாடு நிறுவனங்களின் செயல்பாட்டு செலவை (Operational Costs) அதிகரிக்கலாம். திறமையான பணியாளர்களை பெறுவதில் சிக்கல் ஏற்படுவதால், நிறுவனங்கள் தங்கள் பணியமர்த்தல் கொள்கைகளை மாற்ற வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளன. அரசு இந்த நடவடிக்கையை ஒரு நிறுவனத்திற்கு மட்டும் செய்கிறதா அல்லது மற்ற டெக் ஜாம்பவான்களுக்கும் விரிவுபடுத்துமா என்பதை பொறுத்தே சந்தையின் போக்கையும், டெக் பங்குகளில் ஏற்படும் ஏற்ற இறக்கங்களையும் கணிக்க முடியும்.
