Micron Technology நிறுவனத்தின் தைவான் தொழிற்சாலைகளில் போனஸ் தொடர்பான பிரச்சனை வெடித்துள்ளது. சுமார் 10,000 ஊழியர்கள் தொழிற்சங்கங்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளதால், சப்ளை செயின் பாதிக்குமோ என்ற கவலை முதலீட்டாளர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
போனஸ் பஞ்சாயத்து ஏன்?
தைவானில் உள்ள தௌயுவான் (Taoyuan) மற்றும் தைச்சுங் (Taichung) தொழிற்சாலைகளில் பணிபுரியும் சுமார் 10,000 ஊழியர்கள், தற்போதைய இன்சென்டிவ் பே பிளானை (Incentive Pay Plan) மாற்ற வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். சாம்சங் (Samsung) மற்றும் SK Hynix போன்ற நிறுவனங்களை போல, லாபத்தை பகிர்ந்து கொள்ளும் (Profit-sharing) முறையை கொண்டு வர வேண்டும் என்பது ஊழியர்களின் முக்கிய கோரிக்கை. இந்தாண்டு இதுவரையிலும் இல்லாத அளவிற்கு அதிக போனஸ் வழங்கியுள்ளதாக Micron நிர்வாகம் விளக்கம் அளித்தாலும், தொழிற்சங்கங்கள் சமரசத்திற்கு வரவில்லை.
முதலீட்டாளர்கள் ஏன் கவனிக்க வேண்டும்?
Micron நிறுவனத்தின் ஒட்டுமொத்த DRAM மற்றும் ஹை-பேண்ட்வித் மெமரி உற்பத்தியில் சுமார் 60% தைவானில் தான் நடக்கிறது. செயற்கை நுண்ணறிவு (AI) துறைக்கு தேவையான சிப்களை தயாரிப்பதில் இந்த தொழிற்சாலைகள் மிக முக்கியமானவை. இதனால், அங்கு நடக்கும் ஏதேனும் ஒரு சிறிய இடையூறு கூட உலகளாவிய சிப் சப்ளை செயினில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும்.
தற்போதைய நிலை என்ன?
தைவான் தொழிலாளர் சட்டப்படி, முறையான சமரச பேச்சுவார்த்தை (Mediation) முடியும் வரை வேலைநிறுத்தம் செய்ய முடியாது. இந்த பேச்சுவார்த்தை செப்டம்பர் மாதம் மத்திய வரை நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது வரை உற்பத்தி எவ்வித தடையுமின்றி சீராகவே நடந்து வருகிறது. இருப்பினும், ஊதிய உயர்வால் கம்பெனியின் ஆப்பரேட்டிங் மார்ஜின் (Operating Margin) பாதிக்கப்பட வாய்ப்புள்ளதால், பங்குதாரர்கள் இந்த பேச்சுவார்த்தையின் முடிவை உன்னிப்பாக கவனித்து வருகின்றனர்.
