இந்திய அரசு 'Semicon 2.0' திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. வரும் 8 ஆண்டுகளில் உள்நாட்டிலேயே அதிநவீன 3nm முதல் 7nm வரையிலான செமிகண்டக்டர் சிப்களை தயாரிக்க அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது.
இந்திய அரசு செமிகண்டக்டர் துறையில் அடுத்த கட்டத்திற்கு செல்லத் தயாராகிவிட்டது. 'Semicon 2.0' என்ற பெயரில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த புதிய திட்டத்தின் முக்கிய நோக்கம், வெறும் அசம்பிளி பணிகளைத் தாண்டி, சிப் தயாரிப்பிற்குத் தேவையான முழு விநியோகச் சங்கிலியையும் (Supply Chain) இந்தியாவிலேயே உருவாக்குவதுதான்.
6 அம்ச வியூகம்
இந்தத் திட்டம் சிப் டிசைன், தயாரிப்பு உபகரணங்கள், சிறப்பு ரசாயனங்கள், மேம்பட்ட ஃபேப்ரிகேஷன், ATMP/OSAT மற்றும் ஆராய்ச்சி என மொத்தம் 6 தூண்களை அடிப்படையாகக் கொண்டது. குறிப்பாக, சிப் தயாரிப்பிற்குத் தேவையான 500-க்கும் மேற்பட்ட ரசாயனங்கள் மற்றும் வாயுக்களை இந்தியாவிலேயே தயாரிக்க அரசு திட்டமிட்டுள்ளது. இது உலகளாவிய விநியோகச் சங்கிலித் தடைகளால் இந்திய உற்பத்தி பாதிக்கப்படாமல் இருக்க உதவும்.
தற்போது Micron, Kaynes மற்றும் CG Power ஆகிய நிறுவனங்களின் தொழிற்சாலைகள் கமர்ஷியல் உற்பத்தியைத் தொடங்கியுள்ளன. இது அடுத்தகட்ட வளர்ச்சிக்கான அடித்தளமாக அமையும். மேலும், 1 லட்சம் டிசைன் இன்ஜினியர்களை உருவாக்கவும் அரசு திட்டமிட்டுள்ளது.
முதலீட்டாளர்கள் கவனத்திற்கு
இந்த 3nm சிப் தயாரிப்பு என்பது சாதாரண காரியமல்ல. இத்தகைய அதிநவீன தொழிற்சாலை அமைக்க $15 பில்லியன் வரையிலான முதலீடு தேவைப்படும். அதேபோல், இத்துறையில் சிறிய தொழில்நுட்பக் குறைபாடுகள் கூட பெரிய நஷ்டத்தை உண்டாக்கும் என்பதால், செயல்பாட்டுத் திறன் (Execution) மற்றும் உள்கட்டமைப்பு வசதிகள் மிக முக்கியமானது. மின்சாரம் மற்றும் சுத்திகரிக்கப்பட்ட நீர் போன்ற வளங்கள் தடையின்றி கிடைப்பது முதலீட்டு லாபத்தை நிர்ணயிக்கும் முக்கிய காரணியாக இருக்கும்.
