ஜனவரி 1, 2027 முதல், இ-காமர்ஸ் தளங்கள் கடந்த 30 நாட்களின் குறைந்தபட்ச விலையை கட்டாயம் காட்ட வேண்டும். தவறான விலைக் குறைப்பு விளம்பரங்களை ஒழிக்க அரசு கொண்டு வந்துள்ள இந்த புதிய விதிமுறை, இ-காமர்ஸ் நிறுவனங்களின் வணிக உத்திகளை மாற்றப்போகிறது.
இந்திய அரசு Consumer Protection (E-Commerce) (Amendment) Rules, 2026-ஐ அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. 2025-ம் ஆண்டில் மட்டும் நேஷனல் கன்சூமர் ஹெல்ப்லைனுக்கு வந்த 17.7 லட்சம் புகார்களில், 29% புகார்கள் இ-காமர்ஸ் துறை சார்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இதைச் சரிசெய்யவே இந்த புதிய சட்டங்கள் கொண்டு வரப்படுகின்றன.
டிஸ்கவுண்ட் விளம்பரங்களில் சிக்கல்
இனி ப்ராடக்ட்களின் விலையை முன்னரே உயர்த்தி வைத்துவிட்டு, பின்னர் 'பெரிய தள்ளுபடி' என்று விளம்பரப்படுத்துவது செல்லாது. தள்ளுபடி விலையுடன், கடந்த 30 நாட்களில் அந்த பொருளின் குறைந்தபட்ச விலை என்ன என்பதை கட்டாயம் குறிப்பிட வேண்டும். இது ஆன்லைன் ஷாப்பிங் தளங்களின் தற்போதைய ப்ரோமோஷனல் மாடல்களை நேரடியாக பாதிக்கும். வாடிக்கையாளர்களுக்கு இது வெளிப்படைத்தன்மையை தந்தாலும், நிறுவனங்களின் விற்பனை விகிதத்தில் (Conversion rates) மாற்றம் ஏற்பட வாய்ப்புள்ளது.
தேடல் முடிவுகள் மற்றும் விளம்பரங்கள்
சர்ச் ரிசல்ட்களில் முறைகேடு செய்வதை அரசு தடை செய்துள்ளது. இனி எந்தப் பொருளும் செயற்கையாக முன்னிலைப்படுத்தப்படக் கூடாது. அதேபோல், ஸ்பான்சர் செய்யப்பட்ட (Sponsored) லிஸ்டிங்குகளை மற்ற தேடல் முடிவுகளில் இருந்து தெளிவாக வேறுபடுத்திக் காட்ட வேண்டும். இது நிறுவனங்களின் விளம்பர வருவாயில் தாக்கத்தை ஏற்படுத்தலாம்.
முதலீட்டாளர்கள் கவனிக்க வேண்டியவை
இனி அனைத்து நிறுவனங்களும் தங்கள் குறைகேட்பு அமைப்புகளை நேரடியாக நேஷனல் கன்சூமர் ஹெல்ப்லைனுடன் இணைக்க வேண்டும். மேலும், 2023-ன் 'டார்க் பேட்டர்ன்' (Dark Pattern) வழிகாட்டுதல்களைப் பின்பற்றி ஆண்டுதோறும் தணிக்கை செய்து சான்றிதழ் பெற வேண்டும். இந்த புதிய கட்டமைப்புகளுக்காக நிறுவனங்கள் தொழில்நுட்பம் மற்றும் கஸ்டமர் சப்போர்ட் ஆகியவற்றில் கூடுதல் செலவு செய்ய வேண்டியிருக்கும். இந்த மாற்றங்கள் நிறுவனங்களின் லாப வரம்பை (Profit margins) எந்த அளவுக்கு பாதிக்கும் என்பதைத் தான் சந்தை தற்போது உன்னிப்பாக கவனித்து வருகிறது.
