Sovereign Cloud தொடர்பான கொள்கையில் இந்தியா முக்கிய மாற்றங்களைக் கொண்டுவருகிறது. டேட்டா சேமிப்பு என்பதைத் தாண்டி, தொழில்நுட்பக் கட்டமைப்பின் முழுமையான கட்டுப்பாட்டை இந்தியாவிற்குள் கொண்டுவர அரசு திட்டமிட்டுள்ளது.
இந்தியாவின் Sovereign Cloud கொள்கை விவாதம் தற்போது புதிய பரிமாணத்தை எட்டியுள்ளது. வெறுமனே டேட்டாவை இந்தியாவில் சேமித்து வைப்பது (Data Residency) மட்டும் போதாது, அந்த தொழில்நுட்ப கட்டமைப்பின் 'முழு கட்டுப்பாடும்' (Operational Control) இந்தியாவிற்குள் இருக்க வேண்டும் என்பதே தற்போதைய கோரிக்கையாக உள்ளது. இதில் என்க்ரிப்ஷன் கீ (Encryption Keys) மற்றும் நிர்வாக அணுகல் போன்றவை மிக முக்கியமாகக் கருதப்படுகிறது.
பாதுகாப்பு ஏன் அவசியம்?
ராணுவம், உளவுத்துறை மற்றும் நிதித்துறை சார்ந்த மிக முக்கியமான தரவுகள் வெளிநாட்டு சட்டங்களின் பிடியில் சிக்காமல் இருக்க வேண்டும் என்பதே இந்த மாற்றத்தின் நோக்கம். வெளிநாட்டு நிறுவனங்கள் நிர்வகிக்கும் கட்டமைப்புகளில் இந்தத் தரவுகள் இருப்பது ஆபத்தானது என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
முதலீட்டாளர்கள் கவனத்திற்கு!
2026-ஆம் ஆண்டுக்குள், உலகளவில் Sovereign Cloud உள்கட்டமைப்பு சந்தை $80 பில்லியன் டாலரை எட்டும் என Gartner கணித்துள்ளது. இது இந்திய ஐடி நிறுவனங்களுக்கு மிகப் பெரிய வாய்ப்பாகும். இருப்பினும், இந்த புதிய பாதுகாப்பு நெறிமுறைகளைப் பின்பற்றுவது நிறுவனங்களுக்கு செலவை அதிகரிக்கும் என்பதும் கவனிக்க வேண்டிய விஷயம்.
அரசின் சவால்கள்
தற்போது, MeitY அமைப்பு RBI மற்றும் SEBI ஆகிய நிறுவனங்களின் வழிகாட்டுதல்களுடன் புதிய கிளவுட் கட்டமைப்பை ஒருங்கிணைக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. ஒரே மாதிரியான விதிகள் இல்லை எனில், சேவை நிறுவனங்கள் குழப்பமடைய வாய்ப்புள்ளது. இறுதி வழிகாட்டுதல்கள் மற்றும் அதன் காலக்கெடு, இந்திய ஐடி நிறுவனங்கள் இந்த வாய்ப்பை எவ்வளவு விரைவாகப் பயன்படுத்திக்கொள்ளப் போகின்றன என்பதைத் தீர்மானிக்கும்.
