இந்தியாவில் டேட்டா சென்டர் தேவை கட்டுக்கடங்காமல் உயர்ந்து வருகிறது. கட்டி முடிக்கப்படாத நிலையிலேயே சுமார் 1.2 கிகாவாட் (GW) அளவுக்கு முன்பதிவு (Pre-leasing) செய்யப்பட்டுள்ளது. AI தொழில்நுட்ப வளர்ச்சியால் ஏற்பட்டுள்ள இந்த டிமாண்ட், முதலீட்டாளர்களுக்கு ஒரு சவாலான அதே சமயம் லாபகரமான வாய்ப்பாக மாறியுள்ளது.
டேட்டா சென்டர் கட்டுமானத் துறையில் இந்தியா தற்போது பெரும் மாற்றத்தைச் சந்தித்து வருகிறது. முன்பு, ஒரு கட்டிடம் முழுமையாகத் தயாரான பிறகே நிறுவனங்கள் ஒப்பந்தம் (Lease) செய்யும். ஆனால், இன்று AI கம்ப்யூட்டிங் பவருக்கான போட்டி மிக அதிகமாக இருப்பதால், திட்டமிடல் அல்லது நிலம் கையகப்படுத்தும் நிலையிலேயே நிறுவனங்கள் இடங்களைப் பதிவு செய்து வருகின்றன. இதனால், முன்பதிவு செய்யப்பட்ட அளவு 1.2 GW ஆக அதிகரித்துள்ளது, இது கடந்த ஆண்டின் 550 MW உடன் ஒப்பிடும்போது இருமடங்கு வளர்ச்சி ஆகும்.
ஏன் இந்த திடீர் மவுசு?
Amazon Web Services, Microsoft மற்றும் Google போன்ற உலகளாவிய டெக் ஜாம்பவான்கள் (Hyperscalers) தங்கள் AI பணிகளுக்காக பிரம்மாண்டமான உள்கட்டமைப்பைத் தேடி வருகின்றனர். தற்போது செயல்பாட்டில் உள்ள திறன் 1.8 GW ஆக இருந்தாலும், காலியாக இருக்கும் இடங்களின் விகிதம் (Vacancy Rate) வெறும் 2.8% ஆகக் குறைந்துவிட்டது. இடங்கள் கிடைக்காத சூழல் நிலவுவதால், பல ஆண்டுகள் முன்பே நிறுவனங்கள் ஒப்பந்தங்களை முடிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளன.
முதலீட்டாளர்கள் கவனிக்க வேண்டிய சவால்கள்
Adani Enterprises போன்ற நிறுவனங்கள் AdaniConneX மூலம் பெரும் முதலீடுகளைச் செய்து வருகின்றன. இருப்பினும், இந்த பிரம்மாண்டமான வளர்ச்சிக்கு அதிக அளவில் கடன் வாங்க வேண்டியுள்ளது. திட்டங்களில் தாமதம் ஏற்பட்டால், முதலீட்டின் மீதான வருவாய் நீண்ட காலத்திற்குத் தள்ளிப்போக வாய்ப்புள்ளது.
மின்சாரம் மற்றும் கிரிட் இணைப்பு (Grid connectivity) தான் இந்தத் துறையின் மிகப்பெரிய தடையாக உள்ளது. கட்டிடம் கட்டி முடித்தாலும், தேவையான அளவு மின்சாரம் கிடைக்கவில்லை என்றால் அது பயனற்றதாகிவிடும். AI டேட்டா சென்டர்களுக்குத் தேவைப்படும் அந்த பிரம்மாண்டமான மின்சாரத் தேவையைப் பூர்த்தி செய்வது மின் விநியோக நிறுவனங்களுக்குப் பெரும் சவாலாக உள்ளது.
அரசு விதிமுறைகள் மற்றும் எதிர்காலம்
2027 மே மாதத்தில் வரவுள்ள Digital Personal Data Protection (DPDP) விதிமுறைகள் மிக முக்கியமானது. இதற்கேற்ப டேட்டா ஸ்டோரேஜ் அமைப்புகளை மாற்றவில்லை எனில், அபராதங்களைச் சந்திக்க நேரிடும். 2030-க்குள் 5.6 GW முதல் 9 GW வரை கொள்ளளவை எட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. முதலீட்டாளர்கள் வெறும் கொள்ளளவு அறிவிப்புகளை மட்டும் பார்க்காமல், அந்தந்த நிறுவனங்களின் செயல்முறைத் தரம், கடன் மேலாண்மை மற்றும் மின்சாரப் பயன்பாட்டுத் திட்டமிடல் ஆகியவற்றை உன்னிப்பாகக் கவனிக்க வேண்டும்.
