செப்டம்பர் காலாண்டில் TCS-ஐ விட HCLTech மற்றும் Tech Mahindra அதிக ஊழியர்களை பணியமர்த்தியுள்ளன. பெருமளவில் ஆட்களை எடுப்பதற்குப் பதிலாக, தேவையை அடிப்படையாகக் கொண்ட (Demand-based) பணியமர்த்தலுக்கு ஐடி நிறுவனங்கள் மாறியுள்ளதை இது காட்டுகிறது.
செப்டம்பர் காலாண்டில், ஐடி ஜாம்பவானான TCS-ஐ விட HCLTech மற்றும் Tech Mahindra நிறுவனங்கள் அதிக ஊழியர்களைச் சேர்த்துள்ளன. தரவுகளின்படி, HCLTech 6,440 பேரையும், Tech Mahindra 5,446 பேரையும் பணியமர்த்தியுள்ளன. அதே நேரத்தில், TCS 4,258 பேரை மட்டுமே பணியமர்த்தியுள்ளது. இது இந்திய ஐடி நிறுவனங்களின் பணியாளர் கட்டமைப்பில் ஏற்பட்டுள்ள மிகப்பெரிய மாற்றத்தை வெளிப்படுத்துகிறது.
பழைய முறை vs புதிய வியூகம்
முன்பெல்லாம் ஆர்டர்கள் வரும் என்று முன்பே கணித்து பெருமளவில் ஊழியர்களை (Mass hiring) எடுத்து வைத்திருந்தன. ஆனால், இப்போது நிலைமை தலைகீழ். புராஜெக்ட் உறுதி செய்யப்பட்டால் மட்டுமே ஆட்களை எடுக்கும் 'Demand-triggered' முறையை நிறுவனங்கள் பின்பற்றுகின்றன. இதன் மூலம் தேவையில்லாமல் பெஞ்சில் (Bench) இருக்கும் ஊழியர்களுக்கான செலவு குறைகிறது. ஆர்டிபிஷியல் இன்டெலிஜென்ஸ் (AI) மூலம் உற்பத்தித்திறனை அதிகரித்து, மார்ஜினை (Margin) பாதுகாப்பதே இதன் முக்கிய நோக்கம்.
முதலீட்டாளர்கள் கவனிக்க வேண்டியது என்ன?
இந்த மாற்றத்தால் லாபம் அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன, ஏனெனில் தேவையற்ற செலவுகள் குறைகின்றன. ஆனால், திடீரென பெரிய ஆர்டர்கள் வரும்போது, தேவைக்கேற்ப ஆட்களை உடனடியாகக் கூட்டுவதில் சிக்கல் ஏற்படலாம். இது எதிர்கால வளர்ச்சிக்குத் தடையாக அமையலாம்.
மேலும், இப்போது நிறுவனங்கள் AI கருவிகளைத் தெரிந்த பொறியாளர்களைத் தேடுவதில் அதிக ஆர்வம் காட்டுகின்றன. Wipro போன்ற நிறுவனங்கள் ஊழியர்களின் எண்ணிக்கையைக் குறைத்து வரும் நிலையில், இந்த 'Lean Hiring' முறை எந்த அளவுக்கு லாபத்தைக் கொடுக்கும் என்பதை முதலீட்டாளர்கள் உன்னிப்பாக கவனிக்க வேண்டும்.
