அமெரிக்காவின் வெல்த்டெக் நிறுவனமான AssetMark, ஹைதராபாத்தில் தனது சொந்த GCC மையத்தைத் தொடங்கியுள்ளது. இதன் மூலம் சுமார் 500 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கவுள்ளதுடன், இனி டெக் பணிகளை வெளி நிறுவனங்களுக்குப் பதிலாக தாங்களே நேரடியாக மேற்கொள்ள முடிவு செய்துள்ளது.
அமெரிக்காவின் முன்னணி வெல்த்டெக் நிறுவனமான AssetMark, ஹைதராபாத்தில் புதிய குளோபல் கேப்பபிலிட்டி சென்டரை (GCC) தொடங்கியுள்ளது. இது அந்நிறுவனத்தின் செயல்பாட்டு முறையில் ஒரு பெரிய மாற்றத்தைக் கொண்டுவந்துள்ளது. சுமார் 500 ஊழியர்களுடன் தொடங்கப்பட்டுள்ள இந்த மையம், செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் வாடிக்கையாளர் சேவை தளங்களை உருவாக்குவதில் கவனம் செலுத்தவுள்ளது.
அவுட்சோர்சிங்-க்கு முற்றுப்புள்ளி
கடந்த 10 ஆண்டுகளாக பல வெளி நிறுவனங்களைச் சார்ந்து தனது மென்பொருள் தேவைகளைப் பூர்த்தி செய்து வந்த AssetMark, இனி அந்தப் பணிகளைத் தானே சொந்தமாகச் செய்யத் திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் தனது டெக்னாலஜி roadmap மற்றும் intellectual property-ஐ நேரடியாகக் கட்டுப்பாட்டில் வைக்க முடியும் என்று நிறுவனம் நம்புகிறது.
இந்திய சந்தையில் தாக்கம் என்ன?
உலகளாவிய நிதி நிறுவனங்கள் இந்தியாவுக்கு வந்து சொந்தமாக டெக் மையங்களை அமைக்கும் போக்கு அதிகரித்துள்ளது. இது இந்திய ஐடி சர்வீஸ் நிறுவனங்களுக்கு வருவாய் ரீதியான சவாலாக மாறலாம். வெளி நிறுவனங்களைச் சார்ந்திருப்பதை விட, சொந்தமாக டீம்களைக் கட்டுவதன் மூலம் தரமான சேவையை வேகப்படுத்த முடியும் என்பது இவர்களின் வியூகம்.
தலைமை பொறுப்பு
ஹைதராபாத் நகரத்தின் சிறந்த உள்கட்டமைப்பு வசதிகளைப் பயன்படுத்தி, ஜோஷி அலபார்த்தி (Joshi Alaparthi) தலைமையிலான குழு அமெரிக்க தலைமையகத்துடன் இணைந்து செயல்படும். AssetMark தற்போது GTCR நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் இருப்பதால், பங்குச் சந்தையில் நேரடித் தாக்கம் இல்லையென்றாலும், இந்திய ஐடி துறைக்கான வேலைவாய்ப்பு மற்றும் திறன் தேவை குறித்த முக்கிய தரவுகளை இந்த நகர்வு வெளிப்படுத்துகிறது.
