ஆந்திராவில் EV பேட்டரி துறையில் புரட்சி
இந்தியாவின் எலக்ட்ரிக் வாகன (EV) பேட்டரி விநியோகச் சங்கிலியில் (Supply Chain) ஆந்திரப் பிரதேசம் ஒரு முக்கிய மையமாக உருவெடுக்கும் வகையில், NPSPL Speciality Chemicals Private Limited நிறுவனம் குடுப்பள்ளி மண்டலத்தில், குப்பம் அருகே ஒரு பிரம்மாண்டமான கேத்தோடு மெட்டீரியல் உற்பத்தி ஆலையை அமைக்க உள்ளது. இந்த திட்டத்திற்காக நிறுவனம் ₹2,550 கோடி முதலீடு செய்யவுள்ளது. மாநில அரசின் ஒப்புதலைப் பெற்ற இந்தத் திட்டம், உயர்மதிப்பு கொண்ட உற்பத்தி வசதிகளை ஈர்ப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
புதிய பாலிசி மூலம் முதலீட்டை ஈர்க்கும் மாநில அரசு
லித்தியம்-அயன் பேட்டரிகளின் செயல்திறன், ஆற்றல் அடர்த்தி மற்றும் பாதுகாப்பிற்கு கேத்தோடு மெட்டீரியல்கள் மிக அவசியம். இந்த மூலப்பொருட்களின் உற்பத்தியை உள்நாட்டிலேயே மேற்கொள்வது, இந்தியாவின் EV துறையின் தன்னிறைவுக்கு வழிவகுக்கும். ஆந்திரப் பிரதேசம் கொண்டுவந்துள்ள 'எலக்ட்ரானிக்ஸ் காம்போனென்ட் மேனுபேக்ச்சரிங் பாலிசி 2025-30' (Electronics Component Manufacturing Policy 2025-30) இந்த முயற்சிக்கு வலு சேர்க்கிறது. இது தேசிய உற்பத்தி இலக்குகளை ஆதரிப்பதோடு, இறக்குமதியைச் சார்ந்திருப்பதைக் குறைக்கவும் உதவுகிறது.
வேலைவாய்ப்பு மற்றும் அரசு சலுகைகள்
NPSPL-ன் இந்த புதிய ஆலை 105 ஏக்கர் பரப்பளவில் அமையவுள்ளது. இந்த திட்டத்தின் மூலம் சுமார் 400 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், மாநில அரசின் சிறப்புச் சலுகைகளையும் (Incentives) NPSPL பெற உள்ளது. 'எர்லி-பார்ட்' (Early-bird) சலுகைகள் மூலம், இந்தத் திட்டத்தை மாநில அரசு தீவிரமாக ஆதரிக்கிறது. ஆந்திரப் பிரதேசம், மேம்பட்ட உற்பத்தித் துறையில் ஒரு முன்னணி மாநிலமாக மாறுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
இந்திய EV சந்தையின் வளர்ச்சி
இந்தியாவின் EV பேட்டரி சந்தை 2030-ஆம் ஆண்டுக்குள் சுமார் 2.03 பில்லியன் டாலர் அளவுக்கு வளரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த வளர்ச்சியைப் பயன்படுத்தி, உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்கும் நோக்கில், மத்திய அரசும் 'புரொடக்ஷன் லிங்க்ட் இன்சென்டிவ்' (PLI) போன்ற திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. NPSPL-ன் இந்த முதலீடு, சீனாவின் ஆதிக்கத்தை உடைத்து, உலகளாவிய பேட்டரி விநியோகச் சங்கிலியில் இந்தியாவை ஒரு முக்கிய சக்தியாக மாற்றும் நீண்டகால இலக்கின் ஒரு பகுதியாகும். ஏதர் இண்டஸ்ட்ரீஸ் (Aether Industries) மற்றும் சிமாக்ரி ஸ்பெஷாலிட்டி கெமிக்கல்ஸ் (Himadri Speciality Chemicals) போன்ற நிறுவனங்களும் இந்தப் பிரிவில் முதலீடு செய்து வருவது, இந்திய இரசாயனத் துறையின் ஆர்வத்தைக் காட்டுகிறது.
