AI-யின் கவர்ச்சியால் கிரிப்டோ சரிவு
GitHub தளத்தில் கிரிப்டோகரன்சி தொடர்பான டெவலப்பர் செயல்பாடுகளில் பெரிய வீழ்ச்சி காணப்படுகிறது. முன்னர் வாரத்திற்கு சுமார் 8,71,000 கோட் கமிட்கள் பதிவான நிலையில், தற்போது அது 2,18,000 ஆக குறைந்துள்ளது. இது 75% சரிவாகும். அதேபோல, சுறுசுறுப்பாக செயல்பட்ட டெவலப்பர்களின் எண்ணிக்கையும் சுமார் 8,700 லிருந்து 4,600 ஆக குறைந்துள்ளது, அதாவது 56% வீழ்ச்சி. இது ஒட்டுமொத்த சாப்ட்வேர் டெவலப்மென்ட் துறையில் ஏற்பட்டுள்ள வளர்ச்சிக்கே நேர்மாறாக உள்ளது. 2025-ல் மட்டும் 36 மில்லியனுக்கும் அதிகமான புதிய டெவலப்பர்கள் GitHub-ல் இணைந்தபோதும், கிரிப்டோ பிரிவு நலிவடைந்துள்ளது.
AI துறையின் பிரம்மாண்ட வளர்ச்சி
AI துறையில் ஏற்பட்டுள்ள அசாதாரணமான வளர்ச்சியே இதற்கு காரணம். தற்போது 4.3 மில்லியன் AI தொடர்பான ரெப்போசிட்டரிகள் (Repositories) GitHub-ல் உள்ளன. குறிப்பாக, லார்ஜ் லாங்குவேஜ் மாடல்கள் (LLMs) பயன்படுத்தும் புராஜெக்ட்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டில் மட்டும் 178% அதிகரித்து 1.1 மில்லியன்-ஐ தாண்டியுள்ளது. AI துறையில் உடனடியாகப் பணமாக்கக்கூடிய (Commercial Demand) சாத்தியக்கூறுகளும், பெருமளவு வென்ச்சர் கேப்பிடல் (Venture Capital) நிதியும் முதலீட்டாளர்களை ஈர்க்கிறது. 2025-ல் மட்டும் $211 பில்லியன் AI-க்கு முதலீடு செய்யப்பட்டுள்ளது, இது உலகளாவிய வென்ச்சர் முதலீட்டில் பாதியாகும். ஆனால், கிரிப்டோ துறையில் வென்ச்சர் முதலீடு பெருமளவு குறைந்து, வாரத்திற்கு $18.5 மில்லியன் என்ற குறைந்தபட்ச அளவை எட்டியுள்ளது.
முக்கிய பிளாக்செயின் தளங்களிலும் சரிவு
Ethereum தளத்தில் செயல்படும் டெவலப்பர்களின் எண்ணிக்கை 34% குறைந்து 2,811 ஆக உள்ளது. Solana-வில் 40% சரிந்து 942 ஆகவும், Base-ல் 52% குறைந்து 378 ஆகவும் உள்ளது. Aptos போன்ற புதிய பிளாக்செயின்கள் 60% டெவலப்பர்களை இழந்துள்ளன. BNB Chain-ல் கோட் கமிட்கள் 85% சரிந்துள்ளன. இந்த நிலைமை கிரிப்டோ துறையின் எதிர்கால வளர்ச்சிக்கு சவாலாக பார்க்கப்படுகிறது.
அனுபவமுள்ள டெவலப்பர்கள் மட்டும் தொடர்கிறார்கள்
தற்போது கிரிப்டோ துறையில் நீடித்திருப்பவர்கள் பெரும்பாலும் அனுபவம் வாய்ந்த டெவலப்பர்களாக உள்ளனர். இரண்டு வருடங்களுக்கு மேல் அனுபவம் உள்ளவர்கள் 27% அதிகரித்துள்ளதாகவும், அவர்கள் மொத்த கமிட்களில் 70% பங்களிப்பதாகவும் தரவுகள் காட்டுகின்றன. இதனால், புதியவர்களும், பகுதி நேர டெவலப்பர்களும் தான் இந்த வெளியேற்றத்திற்கு முக்கிய காரணம் என தெரிகிறது.
கிரிப்டோவின் எதிர்கால சவால்கள்
முன்பெல்லாம் கிரிப்டோ சந்தை சரிவடையும் போது, டெவலப்பர்களுக்கு மாற்று வாய்ப்புகள் குறைவாக இருந்தன. ஆனால் இன்று AI துறை அவர்களுக்கு நல்ல வாய்ப்புகளையும், நிதியுதவியையும் வழங்குகிறது. இதனால், கிரிப்டோ புராஜெக்டுகளில் புதிய கண்டுபிடிப்புகள் (Innovation) குறைவதோடு, பாதுகாப்பு அபாயங்களும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. சில கிரிப்டோ புராஜெக்டுகள் வெளிப்படைத்தன்மை இல்லாத (Closed-source) முறைகளில் இயங்குவதும், டெவலப்பர் சமூகத்தின் ஈடுபாட்டைக் குறைக்கிறது.
AI-யின் உடனடி வணிகப் பயன்பாட்டுக்கும், கிரிப்டோவின் ஊக வணிக (Speculative) தன்மைக்கும் உள்ள வேறுபாடு, டெவலப்பர்கள் AI-யை தேர்ந்தெடுக்க முக்கிய காரணம். கிரிப்டோ துறைக்கு 2025 முதல் காலாண்டில் $4.8 பில்லியன் முதலீடு வந்தாலும், அது பெரும்பாலும் DeFi மற்றும் டோக்கனைசேஷன் போன்ற அடிப்படை தொழில்நுட்பங்களுக்கே செல்கிறது. இதனால், புதுமையான புராஜெக்டுகளுக்கு வாய்ப்பு குறைந்துள்ளது.
