UltraTech Cement நிறுவனம் 'Ultravolt' என்ற பெயரில் வயர் மற்றும் கேபிள் சந்தையில் கால்பதித்துள்ளது. இந்த திடீர் வரவால் Polycab, KEI Industries மற்றும் RR Kabel போன்ற முன்னணி நிறுவனங்களின் பங்குகள் கடும் சரிவைச் சந்தித்துள்ளன.
சிமெண்ட் துறையில் ஜாம்பவானாக இருக்கும் UltraTech Cement, இப்போது வயர் மற்றும் கேபிள் சந்தையில் தனது புதிய பிராண்டான 'Ultravolt' மூலம் களமிறங்கியுள்ளது. குஜராத்தின் ஜகாடியாவில் உள்ள தனது தொழிற்சாலையில் திட்டமிட்ட காலத்திற்கு முன்பாகவே வணிக ரீதியான உற்பத்தியை இந்நிறுவனம் தொடங்கியுள்ளது. இதற்காக சுமார் ₹1,800 கோடி முதலீடு செய்யப்பட்டுள்ள நிலையில், அடுத்த 5 ஆண்டுகளில் துறையில் முதல் இரண்டு இடங்களுக்குள் வர இலக்கு நிர்ணயித்துள்ளது.
முதலீட்டாளர்கள் ஏன் கவலைப்படுகிறார்கள்?
இந்த அறிவிப்பு வெளியானதில் இருந்து பங்குச் சந்தையில் பெரிய அதிர்வுகள் ஏற்பட்டுள்ளன. Polycab India, KEI Industries, RR Kabel மற்றும் Havells India போன்ற முன்னணி நிறுவனங்களின் பங்குகள் கடுமையாக சரிந்தன. கடந்த 2 வர்த்தக நாட்களில் மட்டும் இந்த நிறுவனங்களின் சந்தை மதிப்பில் சுமார் ₹21,500 கோடி கரைந்துள்ளதாக தரவுகள் தெரிவிக்கின்றன.
UltraTech-ன் பலம் என்ன?
பொதுவாக புதிய நிறுவனங்கள் டீலர் நெட்வொர்க்கை உருவாக்க நீண்ட காலம் எடுக்கும். ஆனால், UltraTech ஏற்கனவே நாடு முழுவதும் கொண்டுள்ள 5,000-க்கும் மேற்பட்ட 'UltraTech Building Solutions' விற்பனை நிலையங்களை இதற்காகப் பயன்படுத்தப் போகிறது. இது அந்த நிறுவனத்திற்கு ஒரு மிகப்பெரிய பிசினஸ் அட்வான்டேஜ் ஆகும்.
மார்க்கெட்டில் என்ன நடக்கும்?
பெரிய முதலீட்டுடன் களம் இறங்கும் UltraTech, சந்தையைப் பிடிக்க விலை குறைப்பு (Aggressive Pricing) அல்லது டீலர்களுக்கு அதிக சலுகைகளை வழங்கலாம். இதனால் மற்ற கேபிள் நிறுவனங்கள் தங்களின் லாபத்தை (Profit Margin) தக்கவைக்கப் போராட வேண்டிய சூழல் உருவாகியுள்ளது. இதனால் தற்போது இந்த நிறுவனங்களின் மதிப்பீடு (Valuation) குறையத் தொடங்கியுள்ளது. வரும் காலாண்டு முடிவுகளில் இந்த நிறுவனங்கள் எப்படிச் செயல்படுகின்றன என்பதைப் பொறுத்தே இவற்றின் எதிர்காலம் அமையும்.
