தவறான அடையாளம்: பெயர்க்குழப்பம் பங்குச்சந்தையை ஆட்டிப்படைக்கும் விதம்
சந்தை உலகில் ஒரு ட்ரெண்ட் அல்லது ஒரே மாதிரி பெயர்கள் காரணமாக, சில சில்லறை முதலீட்டாளர்கள் (Retail Investors) தவறுதலாக ஒரு நிறுவனத்தின் பங்குகளை வாங்கி, அதனால் பெரிய அளவில் விலையேற்றம் ஏற்பட்டு, பின்னர் நஷ்டத்தை சந்திப்பது தொடர்கதையாகி வருகிறது. இது குறிப்பாக புதிய முதலீட்டாளர்களுக்கு பெரும் ஆபத்தை ஏற்படுத்துகிறது.
பார்லே இண்டஸ்ட்ரீஸின் 'மெலடி' தருணம்
கடந்த மே மாதம் 20 ஆம் தேதி, பார்லே இண்டஸ்ட்ரீஸ் (Parle Industries) நிறுவனத்தின் ஷேர் விலை திடீரென ராக்கெட் வேகத்தில் ஏறி, அப்பர் சர்க்யூட்டை தொட்டது. காரணம், மோடி-மெலோனி இடையேயான 'மெலடி' பேச்சு சமூக வலைத்தளங்களில் வைரலானபோது, முதலீட்டாளர்கள் தவறுதலாக இந்த நிறுவனத்தின் ஷேர்களை வாங்கி குவித்தனர். ஆனால், இந்த நிறுவனத்திற்கும், பிரபல 'மெலடி' டாஃபி அல்லது பார்லே ப்ராடக்ட்ஸ் நிறுவனத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை.
பாம்பே ஆக்ஸிஜன்: கோவிட் கால குழப்பம்
2021 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம், கொரோனா தீவிரமாக இருந்த நேரத்தில், ஆக்ஸிஜன் தட்டுப்பாடு நாடு முழுவதும் ஏற்பட்டது. இதனால், ஆக்ஸிஜன் தொடர்பான நிறுவனங்களின் பங்குகளை வாங்க பலரும் ஆர்வம் காட்டினர். அப்போது, பாம்பே ஆக்ஸிஜன் இன்வெஸ்ட்மெண்ட்ஸ் லிமிடெட் (Bombay Oxygen Investments Ltd) என்ற நிறுவனம், 2019 லேயே தனது ஆக்ஸிஜன் உற்பத்தியை நிறுத்தியிருந்தாலும், அதன் ஷேர் விலை 131.3% வரை உயர்ந்தது. இந்த திடீர் ஏற்றம் குறித்து பங்குச்சந்தை (BSE) விளக்கம் கேட்டபோது, கம்பெனிக்கு இதுகுறித்து தெரியாது என பதிலளித்தது.
எலான் மஸ்க் 'யூஸ் சிக்னல்' ட்வீட்
2021 ஆம் ஆண்டு ஜனவரியில், எலான் மஸ்க் (Elon Musk) ஒரு மெசேஜிங் ஆப்பை (Encrypted Messaging App) பிரபலப்படுத்த 'யூஸ் சிக்னல்' (Use Signal) என ட்வீட் செய்தார். ஆனால், இது அமெரிக்காவில் பட்டியலிடப்பட்ட சிக்னல் அட்வான்ஸ் இன்க் (Signal Advance Inc.) என்ற சிறிய நிறுவனத்தின் ஷேர் விலையை விண்ணை முட்டும் அளவுக்கு உயர்த்தியது. வெறும் 3 வர்த்தக நாட்களில், இந்த நிறுவனத்தின் ஷேர் விலை 5,100% மேல் தாவி, அதன் சந்தை மதிப்பு 7 மில்லியன் டாலரிலிருந்து 390 மில்லியன் டாலராக உயர்ந்தது. இது அந்த சமயத்தில் ஒரு மீம்-ஸ்டாக் (Meme-stock) நிகழ்வாக மாறியது.
ஜூம் குழப்பம்: பெரும் இழப்பு
கோவிட் பெருந்தொற்று காலத்தில், வீட்டில் இருந்து வேலை செய்யும் முறை (Work-from-home) பிரபலமடைந்தபோது, ஜூம் வீடியோ கம்யூனிகேஷன்ஸ் (Zoom Video Communications) மற்றும் ஜூம் டெக்னாலஜிஸ் இன்க் (Zoom Technologies Inc.) ஆகிய இரு நிறுவனங்களுக்கு இடையே முதலீட்டாளர்கள் குழம்பினர். பெயரில் இருந்த ஒற்றுமையால், பலரும் பெரிய அளவில் பிரபலமாகாத ஜூம் டெக்னாலஜிஸ் நிறுவனத்தின் ஷேர்களை வாங்கி குவித்தனர். இந்த குழப்பம் நீடித்ததால், ஜூம் டெக்னாலஜிஸ் தனது பங்கு குறியீட்டை (Ticker Symbol) ZOOM இலிருந்து ZTNO ஆக மாற்ற வேண்டிய நிலை ஏற்பட்டது.
எல்ஜி எலக்ட்ரானிக்ஸ் IPO குளறுபடி
2025 ஆம் ஆண்டு அக்டோபர் 15 ஆம் தேதி, எல்ஜி எலக்ட்ரானிக்ஸ் இந்தியா (LG Electronics India) சந்தையில் அறிமுகமானபோது, முதலீட்டாளர்கள் தவறுதலாக எல்ஜி பாலகிருஷ்ணன் & பிரதர்ஸ் லிமிடெட் (LG Balakrishnan & Bros Ltd) என்ற ஆட்டோ காம்போனென்ட் தயாரிப்பு நிறுவனத்தின் ஷேர்களை வாங்கினர். இந்த இரண்டு நிறுவனங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இதனால், எல்ஜி பாலகிருஷ்ணன் நிறுவனத்தின் வர்த்தக அளவு (Trading Volumes) திடீரென அதிகரித்தது. ஆனால், தவறு புரிந்ததும், அதன் அன்றைய லாபத்தை இழந்து, இறுதியில் சரிவுடன் முடிந்தது.
