கடந்த ஒரு வருடமாக இந்திய பங்குச்சந்தை (Nifty 50) சுமார் 14.1% மட்டுமே வருமானம் தந்த நிலையில், அமெரிக்க சந்தை (S&P 500) 25.2% மற்றும் MSCI Emerging Markets இன்டெக்ஸ் 43.0% என அபார வளர்ச்சியை எட்டியுள்ளன. இந்த மிகப்பெரிய செயல்திறன் இடைவெளிதான், இந்திய முதலீட்டாளர்களை சர்வதேச நிதிகளை நோக்கி நகர வைத்துள்ளது.
வளர்ச்சி துறைகளில் முதலீடு
செயற்கை நுண்ணறிவு (AI), செமிகண்டக்டர், கிளவுட் சர்வீஸ், சைபர் செக்யூரிட்டி, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, மின்சார வாகனங்கள் (EV), இ-காமர்ஸ் போன்ற வேகமாக வளர்ந்து வரும் துறைகளில் உள்ள நிறுவனங்களில் முதலீடு செய்ய முதலீட்டாளர்கள் ஆர்வம் காட்டுகின்றனர்.
கரன்சி ஹெட்ஜிங் நன்மை
வெளிநாட்டு நாணயங்களில் (குறிப்பாக அமெரிக்க டாலர்) முதலீடு செய்வதால், இந்திய ரூபாயின் மதிப்பு குறைந்தால், முதலீட்டின் மதிப்பும் கூடும். இது ஒருவகையான கரன்சி ஹெட்ஜிங் (Currency Hedging) நன்மையை அளிக்கிறது.
உலகளாவிய மூலதன நகர்வுகள்
தைவான், தென் கொரியா, சீனா போன்ற சந்தைகளில் வெளிநாட்டு முதலீடு குவிந்து வருகிறது. ஆனால் இந்தியாவில் முதலீடு குறைந்து வருவது, முதலீட்டாளர்களை வேறு இடங்களில் நல்ல லாபம் தேட வைக்கிறது.
வெளிநாட்டு நிதிகளின் அதிரடி வருமானம்
வெளிநாட்டு நிதிகள் கடந்த ஆண்டில் சராசரியாக 46.2% வருமானம் தந்துள்ளன. Nippon India Taiwan Equity Fund கடந்த ஆண்டில் மட்டும் 234.7% வருமானத்தை ஈட்டியுள்ளது. Mirae Asset Global Electric & Autonomous Vehicles Equity Passive FoF 104.9% வருமானம் தந்துள்ளது.
கவனிக்க வேண்டிய அபாயங்கள்
புவிசார் அரசியல் (Geopolitical) பிரச்சனைகள், விதிமுறை மாற்றங்கள், வர்த்தக தடைகள், கரன்சி ஏற்ற இறக்கங்கள், ஒரு சில பங்குகளில் மட்டும் முதலீடு குவிவதால் ஏற்படும் ரிஸ்க் போன்ற பல ஆபத்துகள் உள்ளன. எனவே, இந்த நிதிகளில் முதலீடு செய்வதற்கு முன், நீண்ட கால மதிப்பு மற்றும் அபாயங்களை கவனமாக ஆராய வேண்டும்.
சரியான ஒதுக்கீடு
நிதி ஆலோசகர்கள், வெளிநாட்டு நிதிகளில் உங்கள் போர்ட்ஃபோலியோவில் 5% முதல் 10% வரை மட்டுமே ஒதுக்கீடு செய்ய பரிந்துரைக்கின்றனர். இது முதலீட்டை பன்முகப்படுத்தவும், அபாயங்களை குறைக்கவும் உதவும்.
