Peak XV மற்றும் Bessemer Venture Partners போன்ற முன்னணி வென்ச்சர் கேபிடல் நிறுவனங்கள், AI துறையில் முதலீடு செய்துள்ளவர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளன. நியாயமற்ற வேல்யுவேஷன் மற்றும் சிக்கலான நிதி அமைப்புகளால், 2027-ம் ஆண்டிற்குள் AI மார்க்கெட்டில் பெரிய சரிவு ஏற்பட வாய்ப்புள்ளதாகத் தெரிவித்துள்ளன.
குழப்பமான நிதி முறைகள் (Tranchopalooza)
முதலீட்டாளர்களின் மிகப்பெரிய கவலை, தற்போது ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் பின்பற்றும் 'Tranchopalooza' என்ற நிதி முறைதான். அதாவது, ஒரே சமயத்தில் வெவ்வேறு மற்றும் முரண்பாடான விலைகளில் நிதி திரட்டுவது. Peak XV-ன் நிர்வாக இயக்குனர் சைலேந்திர சிங் கூறுகையில், இது வென்ச்சர் ஈகோசிஸ்டத்தை சீர்குலைப்பதாகவும், சமீப காலங்களில் கண்டிராத அளவுக்கு நிலைமை மோசமாக இருப்பதாகவும் எச்சரித்துள்ளார். இதனால் ஒரு நிறுவனத்தின் உண்மையான மதிப்பை கண்டறிவது முதலீட்டாளர்களுக்கு கடினமாகிறது.
விளம்பரத்திற்கும் உண்மைக்கும் உள்ள வித்தியாசம்
AI துறை சார்ந்த நிறுவனங்கள், லாபத்தை நோக்கமாகக் கொள்ளாமல், வெறும் உள்கட்டமைப்புச் செலவுகளை (Computing power) மட்டுமே காட்டி முதலீடுகளை ஈர்க்கின்றன. ARR அல்லது ஒட்டுமொத்த வருவாய் (Cumulative revenue) போன்றவற்றை வைத்து முதலீட்டாளர்களைக் கவர முயலும் நிறுவனங்கள், தங்கள் வளர்ச்சியில் உள்ள தொய்வை மறைக்கின்றன. வருவாயை விட, உண்மையான பிசினஸ் மாடல் மற்றும் நிதி ஒழுக்கம் (Financial discipline) இல்லாத நிறுவனங்கள் எதிர்காலத்தில் கடுமையான சரிவைச் சந்திக்கும் என முதலீட்டாளர்கள் அறிவுறுத்துகின்றனர்.
முதலீட்டாளர்கள் கவனத்திற்கு
எதிர்காலத்தில், வெறும் 'ஹைப்' (Hype) காரணமாக வளரும் நிறுவனங்கள் நிலைத்திருக்க முடியாது. கம்பெனிகள் தங்கள் நிதி அறிக்கைகளை எப்படி சமர்ப்பிக்கின்றன, லாபத்தை ஈட்டுவதில் எந்தளவு உறுதியாக உள்ளன என்பதைப் பொறுத்தே அவற்றின் வெற்றி அமையும். 2027-ம் ஆண்டிற்குள் நடக்கப்போகும் இந்த மார்க்கெட் திருத்தம், உண்மையான திறமை கொண்ட நிறுவனங்களை மட்டுமே நிலைக்க வைக்கும்.
