பெங்களூருவைச் சேர்ந்த Loopworm நிறுவனம், இதுவரை அனிமல் ஃபீட் தயாரிப்பில் கவனம் செலுத்தி வந்த நிலையில், இப்போது அதிக லாபம் தரும் பார்மா மற்றும் பயோடெக் துறைக்குள் களமிறங்குகிறது.
பெங்களூருவைச் சேர்ந்த Loopworm நிறுவனம், தனது வணிக மாதிரியில் அதிரடி மாற்றத்தை அறிவித்துள்ளது. இதுவரை பட்டுப்புழு கழிவுகளைப் பயன்படுத்தி அனிமல் ஃபீட் தயாரித்து வந்த நிறுவனம், இனி பார்மா மற்றும் டயக்னாஸ்டிக் துறைகளுக்குத் தேவையான என்சைம்கள் (Enzymes) மற்றும் ரியேஜெண்டுகளைத் தயாரிக்க உள்ளது.
தொழில்நுட்பமும் மாற்றமும்
நிறுவனத்தின் சொந்த தொழில்நுட்பமான LoopBac தளத்தைப் பயன்படுத்தி, பட்டுப்புழுக்கூடுகளை ஒரு பயோ-ஹோஸ்டாக மாற்றி புரதங்களைத் தயாரிக்கின்றனர். தற்போது இந்தியாவில் ஆய்வகங்கள் மற்றும் பார்மா நிறுவனங்கள் பல பொருட்களை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்கின்றன. இந்த இறக்குமதியைக் குறைத்து, உள்நாட்டிலேயே தரமான பொருட்களை மலிவான விலையில் தருவதே இவர்களின் இலக்கு.
லாபத்தில் இயங்கும் ஸ்டார்ட்அப்
ஏற்கனவே இந்த நிறுவனம் லாபத்தில் இயங்கி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. விரைவில் நடைபெறவிருக்கும் Series A ஃபண்டிங் மூலம் தனது உற்பத்தித் திறனை அதிகரிக்க நிறுவனம் திட்டமிட்டுள்ளது. பெங்களூருவில் உள்ள இவர்களின் 6,000 மெட்ரிக் டன் உற்பத்தி வசதி கொண்ட LoopFactory மூலம் தங்களின் இந்த புதிய திட்டத்தை விரிவுபடுத்த உள்ளனர்.
அடுத்த கட்ட இலக்கு
தொடக்கத்தில் டயக்னாஸ்டிக் சந்தையில் கவனம் செலுத்தும் இந்நிறுவனம், பின்னர் தடுப்பூசி தயாரிப்பு (Vaccine Antigens) மற்றும் பல்வேறு மருத்துவ ஆராய்ச்சித் தேவைகளுக்கான புரதங்களைத் தயாரிக்கும் இலக்கைக் கொண்டுள்ளது. தரமான பார்மா பொருட்களை உற்பத்தி செய்வதில் வெற்றி பெற்றால், உலகளாவிய நிறுவனங்களுக்கு போட்டியாக Loopworm வளரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
