IIT Bombay-ல் உருவான InspeCity நிறுவனம், தனது விண்வெளி சேவை திட்டங்களுக்காக ரூ.100 கோடி நிதியை திரட்டியுள்ளது. Speciale Invest மற்றும் Ashish Kacholia தலைமையில் இந்த நிதி திரட்டப்பட்டுள்ளது.
விண்வெளியில் ஒரு மராமத்து பணி!
விண்வெளியில் சுற்றிக்கொண்டிருக்கும் செயற்கைக்கோள்களுக்கு எரிபொருள் தீர்ந்துபோனாலோ அல்லது சிறு தொழில்நுட்பக் கோளாறுகள் ஏற்பட்டாலோ, அவை விண்வெளி குப்பைகளாக மாறிவிடும். இதைத் தடுக்கும் நோக்கில், InspeCity நிறுவனம் ISAM (In-space Servicing, Assembly, and Manufacturing) என்ற தொழில்நுட்பத்தில் கவனம் செலுத்துகிறது. அதாவது, விண்வெளியிலேயே செயற்கைக்கோள்களை ரிப்பேர் செய்வது மற்றும் அவற்றின் ஆயுட்காலத்தை நீட்டிப்பதுதான் இவர்களின் பிரதான வேலை.
அடுத்த 18 மாதங்களுக்கான திட்டம்
இந்த ₹100 கோடி நிதியைக் கொண்டு, அடுத்த 12 முதல் 18 மாதங்களுக்குள் நான்கு விண்வெளி பயணங்களை (In-orbit missions) மேற்கொள்ள நிறுவனம் திட்டமிட்டுள்ளது. தங்களின் தொழில்நுட்பத் திறனை நிரூபிக்க மூன்று முக்கிய அமைப்புகளை இவர்கள் உருவாக்கியுள்ளனர்:
- GITA: விண்வெளியில் நகர்வதற்கும் திசையை மாற்றுவதற்குமான ப்ரொபல்ஷன் சிஸ்டம்.
- CHAKSU: அருகில் உள்ள பொருள்களைக் கண்டறியும் சென்சார் தொழில்நுட்பம்.
- VEDA: ஆயுட்காலத்தை நீட்டிப்பதற்கான பிரத்யேக அமைப்பு.
இதில் இருக்கும் சவால்கள் என்ன?
விண்வெளி தொழில்நுட்பம் என்பது அதிக முதலீடு தேவைப்படும் ஒரு துறை (Capital-intensive). இதில் லாபம் ஈட்ட நீண்ட காலம் காத்திருக்க வேண்டியிருக்கும். முக்கியமாக, விண்வெளியில் சோதனை செய்யும் போது ஒரு சிறிய தோல்வி கூட பெரிய நிதி இழப்பை ஏற்படுத்திவிடும். எனவே, இவர்களது தொழில்நுட்பம் விண்வெளியின் கடுமையான சூழலில் எவ்வளவு சிறப்பாக செயல்படுகிறது மற்றும் இதற்கான வணிக ரீதியான தேவைகள் எந்தளவுக்கு உள்ளன என்பதை பொறுத்தே இந்த நிறுவனத்தின் வளர்ச்சி அமையும்.
