இந்திய ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் வென்ச்சர் கேபிடல் மூலதனத்தை மட்டும் நம்பியிருக்காமல், பொதுச் சந்தையில் (Public Market) பட்டியலிடப்பட வேண்டும் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வலியுறுத்தியுள்ளார். மேலும், டீப்டெக் மற்றும் ஹார்டுவேர் துறைகளுக்குத் தேவையான நீண்டகால முதலீடு (Patient Capital) குறித்து 10 நாட்களில் அறிக்கை சமர்ப்பிக்கவும் அவர் உத்தரவிட்டுள்ளார்.
பெங்களூருவில் நடைபெற்ற 'Sangam 2026' நிகழ்ச்சியில் பேசிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், இந்தியாவின் வளர்ந்து வரும் ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் இனி அடுத்த கட்டத்திற்கு நகர வேண்டிய நேரம் வந்துவிட்டதாகக் குறிப்பிட்டார். பல நிறுவனங்கள் நீண்ட காலத்திற்கு வென்ச்சர் கேபிடல் (VC) பணத்தை மட்டுமே நம்பியிருப்பதை விடுத்து, பங்குச் சந்தையில் IPO மூலம் நிதி திரட்ட வேண்டும் என்பது அரசின் விருப்பமாக உள்ளது.
சந்தை மற்றும் வெளிப்படைத்தன்மை
பொதுச் சந்தையில் நுழையும்போது நிறுவனங்களுக்குக் கூடுதல் முதலீடு கிடைப்பதோடு, சில்லறை முதலீட்டாளர்களும் நாட்டின் புதிய தொழில்நுட்ப வளர்ச்சியை நேரடியாகப் பயன்படுத்திக்கொள்ள முடியும். அதே சமயம், பங்குச் சந்தை என்று வந்துவிட்டால், நிர்வாகத்தில் கூடுதல் வெளிப்படைத்தன்மையும், லாபத்தை உறுதி செய்யும் பொறுப்பும் நிறுவனங்களுக்கு அதிகரிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
டீப்டெக் துறைக்கு 'Patient Capital'
டீப்டெக் (Deeptech) மற்றும் ஹார்டுவேர் போன்ற துறைகளில் லாபம் பார்க்க நீண்ட காலம் எடுக்கும். இதற்கு 'Patient Capital' எனப்படும் நீண்டகால முதலீடு அவசியம் என்பதை ஏற்றுக்கொண்ட அமைச்சர், இந்தத் துறை சார்ந்த வல்லுநர்கள் தங்கள் தேவை குறித்த திட்ட வரைவை 10 நாட்களுக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார். செமிகண்டக்டர், குவாண்டம் கம்ப்யூட்டிங் போன்ற துறைகளின் வளர்ச்சிக்கு இது மிக முக்கியம்.
அரசின் இலக்கு
விண்வெளி மற்றும் பாதுகாப்புத் துறைகளில் தனியார் பங்களிப்பை அதிகரித்ததன் மூலம் இந்தியா எப்படி வெற்றி கண்டதோ, அதே போல உற்பத்திக் கட்டமைப்பிலும் மாற்றத்தை ஏற்படுத்த அரசு திட்டமிடுகிறது. ஸ்டார்ட்அப்கள் சந்தைக்கு வரும்போது, முதலீட்டாளர்கள் கவனமாக இருக்க வேண்டியது அவசியம். இந்தத் துறைகளில் நீண்டகால ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுச் செலவுகள் (R&D Costs) அதிகம் என்பதால், ரிஸ்க்குகளைக் கணித்து முதலீடு செய்வது முதலீட்டாளர்களுக்கு நல்லது.
