சமையல் பாத்திரங்கள் தயாரிப்பில் முன்னணியில் உள்ள Bergner India நிறுவனம், தற்போது சுமார் ₹200 கோடி முதல் ₹250 கோடி (சுமார் $21-26 மில்லியன்) வரையிலான புதிய ஃபண்டிங் ரவுண்டிற்கான இறுதிக்கட்ட பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுள்ளது. இதில் A91 Partners நிறுவனம் முக்கிய முதலீட்டாளராக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்திய வீடுகளில் ஆரோக்கியம் குறித்த விழிப்புணர்வு அதிகரித்து வருவதாலும், ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் போன்ற சமையல் பாத்திரங்களுக்கு மக்கள் முக்கியத்துவம் கொடுப்பதாலும், ப்ரீமியம் நுகர்வோர் சந்தையில் தனித்துவமான பிராண்டுகளுக்கான தேவை அதிகரித்துள்ளது. மாஸ்டர்செஃப் இந்தியாவுடனும் தொடர்பில் உள்ள Bergner India, இந்த வளர்ச்சியைப் பயன்படுத்தி முதலீட்டாளர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
கம்பெனியின் நிதிநிலையும் சிறப்பாக உள்ளது. கடந்த நிதியாண்டு 2024-ல் (FY24) ₹200 கோடி வருவாய் ஈட்டிய நிலையில், 2025-ல் (FY25) அது 27% அதிகரித்து ₹255 கோடியாக உயர்ந்துள்ளது. மேலும், வரிக்குப் பிந்தைய லாபம் (PAT) ₹1.5 கோடியிலிருந்து ₹4 கோடியாக கணிசமாக வளர்ந்துள்ளது.
இந்த புதிய முதலீட்டை, Bergner India நிறுவனம் தனது ஆன்லைன் வர்த்தகத்தை விரிவுபடுத்தவும், நேரடி சில்லறை விற்பனை (Physical Retail) தளங்களை அதிகரிக்கவும் பயன்படுத்த திட்டமிட்டுள்ளது. இருப்பினும், இந்த ஃபண்டிங் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் எதுவும் A91 Partners அல்லது Bergner India தரப்பிலிருந்து இதுவரை வரவில்லை.
