RBI-யின் புதிய உத்தரவால் Tata Sons நிர்வாகம் இன்று அவசரக் கூட்டத்தைக் கூட்டியுள்ளது. நிறுவனத்தின் 'Core Investment Company' அந்தஸ்து ரத்து செய்யப்பட்டுள்ளதால், கட்டாயமாக பங்குச்சந்தையில் (IPO) நுழைய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
RBI-யின் இந்த அதிரடி முடிவால், இந்தியாவின் மிகப்பெரிய கார்ப்பரேட் குழுமங்களில் ஒன்றான Tata Sons-ன் எதிர்கால கட்டமைப்பு தற்போது கேள்விக்குறியாகியுள்ளது. ஒரு 'Upper-layer NBFC' என வகைப்படுத்தப்பட்டுள்ளதால், விதிகளின்படி இந்த நிறுவனம் பங்குச்சந்தையில் லிஸ்ட் செய்யப்பட வேண்டியது கட்டாயமாகிறது.
தலைவலியாகும் தலைமை மாற்றம்
இந்த சூழலில், நிறுவனத்தின் சேர்மன் என்.சந்திரசேகரனின் பதவிக்காலம் பிப்ரவரி 20, 2027-ல் முடிவடைகிறது. அவர் விலகத் தயாராக இருந்தாலும், இக்கட்டான இந்த நேரத்தில் நிறுவனத்தை வழிநடத்த அவரது அனுபவம் அவசியம் என ஒரு தரப்பு போர்டு உறுப்பினர்கள் கருதுகின்றனர். எனவே, அவருக்கு பதவி நீட்டிப்பு வழங்கப்படுமா அல்லது புதிய தலைமை கொண்டுவரப்படுமா என்பது முக்கிய விவாதமாக உள்ளது.
சட்டப்போராட்டமா? IPO-வா?
RBI ஏற்கனவே பம்பாய் உயர் நீதிமன்றத்தில் கேவியட் (Caveat) தாக்கல் செய்துள்ளதால், சட்டரீதியான சவால்களை எதிர்கொள்வது எளிதல்ல. Tata Trusts-ன் கட்டுப்பாட்டில் உள்ள 66% பங்குகள் இருப்பதால், நோவல் டாட்டா தலைமையிலான நிர்வாகம் என்ன முடிவெடுக்கப் போகிறது என்பதை சந்தையே உற்றுநோக்கி வருகிறது.
இந்த நிச்சயமற்ற தன்மை காரணமாக, டாட்டா குழுமப் பங்குகளின் விலையில் கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கங்கள் காணப்படுகின்றன. நிறுவனம் IPO பாதையில் செல்லுமா அல்லது வேறு மாற்று வழிமுறைகளைத் தேடுமா என்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு முதலீட்டாளர்களுக்குத் தெளிவைத் தரும்.
