இந்திய பங்குச்சந்தை கட்டுப்பாட்டு வாரியமான SEBI, முக்கிய நிறுவனங்களின் நிதி முறைகேடுகளை கண்டறிய உதவும் வகையில், 18 புதிய தணிக்கை (Forensic Auditors) நிறுவனங்களை அடுத்த 3 ஆண்டுகளுக்கு நியமித்துள்ளது. இது சந்தையில் வெளிப்படைத்தன்மையை அதிகரிக்கவும், முதலீட்டாளர் பாதுகாப்பை வலுப்படுத்தவும் உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்திய பங்குச்சந்தை மற்றும் பத்திரங்கள் வாரியம் (SEBI) முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. சந்தையில் உள்ள நிறுவனங்களின் நிதி முறைகேடுகள், கணக்கு வழக்குகளில் ஏற்படும் குளறுபடிகள் ஆகியவற்றை கண்டறிவதற்காக, 18 புதிய தணிக்கை நிறுவனங்களை (Forensic Auditors) நியமித்துள்ளதாக SEBI தெரிவித்துள்ளது. இந்த நியமனம் அடுத்த 3 ஆண்டுகளுக்கு அமலில் இருக்கும்.
முக்கிய நிறுவனங்கள் நியமனம்
இந்த புதிய பட்டியலில் EY LLP, KPMG Assurance and Consulting Services LLP, Grant Thornton Bharat LLP, Nangia & Co LLP போன்ற முன்னணி சர்வதேச மற்றும் உள்நாட்டு கணக்கு தணிக்கை நிறுவனங்கள் இடம்பெற்றுள்ளன. மேலும், J C Kabra & Associates, J Mandal & Co LLP, J Singh & Associates, Jain Jagawat Kamdar and Company, Pipara & Co LLP, R Kabra & Co LLP, R S Patel and Co, Ravi Rajan and Co LLP, S S Periwal and Co, Sarath and Associates, SKVM and Company, V Singhi & Associates, ASA & Associates LLP, மற்றும் CLA Indus Value Consulting ஆகிய நிறுவனங்களும் சேர்க்கப்பட்டுள்ளன.
வெளிப்படைத்தன்மை மற்றும் முதலீட்டாளர் பாதுகாப்பு
SEBI-யின் இந்த நடவடிக்கை, பங்குச் சந்தையில் நிலவும் வெளிப்படைத்தன்மையை அதிகரிக்கவும், மோசடிகளை தடுக்கவும் உதவும். குறிப்பாக, நிறுவனங்களின் நிதி அறிக்கைகள், கணக்கு வைப்பு முறைகள் மற்றும் நிர்வாகத்தின் செயல்பாடுகள் ஆகியவற்றில் சந்தேகங்கள் எழும்போது, இந்த தணிக்கை நிறுவனங்கள் மூலம் SEBI ஆழமான விசாரணைகளை மேற்கொள்ளும். கடந்த காலங்களில், சில நிறுவனங்களின் மீது எழுந்த சந்தேகங்களை விசாரிக்க SEBI இது போன்ற தணிக்கைகளை தீவிரமாக பயன்படுத்தி வந்துள்ளது. இதன் முக்கிய நோக்கம், சிறு முதலீட்டாளர்களின் நலனை பாதுகாப்பதாகும். வரவிருக்கும் மாதங்களில், SEBI எந்தெந்த நிறுவனங்கள் மீது இந்த தணிக்கைகளை மேற்கொள்ளும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
