அக்டோபர் 16 முதல் Gold Fund-of-Funds திட்டங்களில் புதிய முதலீடுகளை மேற்கொள்ள செபி (SEBI) தடை விதித்துள்ளது. ரூபாய் மதிப்பை stabilize செய்ய இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எனினும், Gold ETFs-ல் முதலீடு செய்ய எந்த தடையும் இல்லை.
செபி (SEBI) அதிரடி தடை
இந்திய பங்குச்சந்தை ஒழுங்குமுறை ஆணையமான செபி, அக்டோபர் 16 முதல் கோல்ட் ஃபண்ட்-ஆஃப்-ஃபண்ட்ஸ் (Gold FoFs) திட்டங்களில் புதிய முதலீடுகளை ஏற்க வேண்டாம் என மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு உத்தரவிட்டுள்ளது. லம்ப்சம் (Lump-sum) முதலீடு, SIP மற்றும் STP என அனைத்து வழிகளிலும் புதிய முதலீடுகள் நிறுத்தப்படுகின்றன. தங்கம் மீதான தேவையைக் குறைத்து, இந்திய ரூபாயின் மதிப்பை வலுப்படுத்துவதே இந்த நடவடிக்கையின் முக்கிய நோக்கம்.
முதலீட்டாளர்களுக்கு என்ன பாதிப்பு?
பொதுவாக தங்கம் வாங்க டிமேட் அக்கவுண்ட் (Demat Account) இல்லாதவர்கள் இந்த ஃபண்ட்-ஆஃப்-ஃபண்ட்ஸ் முறையை விரும்புவார்கள். தற்போது செபி இந்த திட்டங்களுக்கு தடை விதித்துள்ளதால், இவர்களுக்கு சிரமம் ஏற்படலாம். ஆனால், Gold ETFs-ல் முதலீடு செய்ய எந்த தடையும் இல்லை. இவை பங்குச் சந்தையில் வழக்கம் போல வர்த்தகம் செய்யப்படும்.
புள்ளிவிவரங்கள் சொல்வதென்ன?
தற்போது மியூச்சுவல் ஃபண்ட் துறையில் உள்ள தங்க முதலீடுகளில் 34% ஃபண்ட்-ஆஃப்-ஃபண்ட்ஸ் மூலமாகவும், 66% கோல்ட் ETF மூலமாகவும் உள்ளது. கடந்த ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான காலகட்டத்தில் தங்கம் இறக்குமதி 27.32% சரிந்து $19.27 பில்லியன் டாலராக உள்ளது. இருப்பினும், தனிநபர் தங்க நகைகள் மற்றும் கட்டிகளின் தேவை குறையவில்லை என்பதால், இந்தத் தடையால் பெரிய மாற்றம் ஏற்படுமா என்ற சந்தேகம் சந்தை நிபுணர்கள் மத்தியில் உள்ளது.
அடுத்த கட்டம் என்ன?
இனி தங்கத்தில் முதலீடு செய்ய விரும்புபவர்கள் டிமேட் அக்கவுண்ட் தொடங்கி Gold ETFs-க்கு மாற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. முதலீட்டாளர்கள் தங்க முதலீட்டைத் தொடர்வார்களா அல்லது நிறுத்தி வைப்பார்களா என்பதுதான் வரும் நாட்களில் சந்தையில் கவனிக்கப்பட வேண்டிய முக்கியமான விஷயம்.
