2014-2015 காலக்கட்டத்தில் BSE-யில் நடைபெற்ற சர்ச்சைக்குரிய 'Illiquid Stock Options' வர்த்தக வழக்குகளை முடிவுக்கு கொண்டுவர, நான்காவது முறையாக செட்டில்மெண்ட் திட்டத்தை கொண்டு வர SEBI திட்டமிட்டுள்ளது.
பழைய வழக்குகளுக்கு முற்றுப்புள்ளி
கடந்த 2014 ஏப்ரல் 1 முதல் 2015 செப்டம்பர் 30 வரையிலான காலக்கட்டத்தில், BSE-யில் நடைபெற்ற 'Illiquid Stock Options' வர்த்தகங்களில் முறைகேடு நடந்ததாக புகார்கள் எழுந்தன. இதை விசாரிக்கும் விதமாக SEBI ஏற்கனவே 2020, 2022 மற்றும் 2024 ஆகிய ஆண்டுகளில் செட்டில்மெண்ட் வாய்ப்புகளை வழங்கியிருந்தது. தற்போது, இன்னும் நிலுவையில் உள்ள பல்லாயிரக்கணக்கான வழக்குகளை முடிக்க, 4-வது முறையாக இந்த விண்டோவை திறக்க அதிகாரிகள் மும்முரம் காட்டி வருகின்றனர்.
சட்ட சிக்கல்களில் இருந்து தப்பிக்க வழி
இந்தத் திட்டத்தின் மூலம், சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் தங்கள் மீது சுமத்தப்பட்ட குற்றங்களை ஒப்புக்கொள்ளாமலேயே, குறிப்பிட்ட செட்டில்மெண்ட் கட்டணம் மற்றும் இதர கட்டணங்களைச் செலுத்தி வழக்கிலிருந்து வெளியேற முடியும். இதன் மூலம் நீதிமன்ற அலைச்சலையும், நீண்டகால சட்டப் போராட்டங்களையும் தவிர்க்க முடியும். இந்தத் திட்டம் ஒப்புதல் பெற்றால், வரும் 2026 நவம்பர் மாத இறுதியில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சட்ட விதிகளில் மாற்றம்
இந்த நடவடிக்கை SEBI-ன் ஒட்டுமொத்த கட்டுப்பாட்டு முறையை சீரமைக்கும் ஒரு பகுதியாகும். ஏற்கனவே கடந்த 2026 ஆகஸ்ட் மாதம், செட்டில்மெண்ட் நடைமுறைகளை எளிமையாக்க மற்றும் அபராதங்களை கணக்கிடும் முறையில் தெளிவுபடுத்த ஒரு ஆலோசனைக் கடிதத்தை SEBI வெளியிட்டுள்ளது. இதற்கான கருத்துகளைத் தெரிவிக்க 2026 செப்டம்பர் 4 வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
வழக்கின் இறுதிக்கட்ட நிபந்தனைகள் மற்றும் கால அவகாசம் குறித்த விரிவான அறிவிப்பு வெளியானதும், பாதிக்கப்பட்ட முதலீட்டாளர்கள் அதற்கேற்ப செயல்படலாம். இந்த விண்டோ சுமார் 3 மாதங்கள் திறந்திருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.
